/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'டெண்டர்' பணிகளை எடுத்து செய்யும் அரசு பொறியாளர்! 'டெண்டர்' பணிகளை எடுத்து செய்யும் அரசு பொறியாளர்!
'டெண்டர்' பணிகளை எடுத்து செய்யும் அரசு பொறியாளர்!
'டெண்டர்' பணிகளை எடுத்து செய்யும் அரசு பொறியாளர்!
'டெண்டர்' பணிகளை எடுத்து செய்யும் அரசு பொறியாளர்!
PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM

பெஞ்சில் ஆஜரானதும், ''முன்பணத்தை நிறுத்திட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே பேச்சை தொடர்ந்தார்...
''தமிழக அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை 5,000த்துல இருந்து, 10,000 ஆயிரமா அ.தி.மு.க., ஆட்சியில உசத்தினா... இதை வட்டியில்லாம, 10 மாதம் அவா சம்பளத்துல பிடித்தம் செஞ்சுப்பா ஓய்...
''இதன்படி, மின்வாரியத்தில், தீபாவளி, பொங்கல், ஓணம், ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு அனைத்து பண்டிகைகளுக்கும் ஊழியர்கள் முன்பணம் வாங்கிண்டு இருந்தா... சில மாதங்களா இந்த முன்பணம் வழங்கறதை நிறுத்திட்டா... 'அடுத்து சில மாதங்கள்ல பண்டிகைகள் அணிவகுத்து வர்ரதால, இந்த சலுகையை மீண்டும் அமல்படுத்தணும்'னு அவா எல்லாம் கேக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆக்டிவா இருக்கிறவங்களை போடுங்கன்னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு தினமும் 2,000த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வராங்க... இதுல, அடிதடி, விபத்து, கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வர்ற சிலரால, மருத்துவமனையிலயே இரு தரப்பினருக்கும் மோதல் வந்துடுது பா...
''இதனால, இங்க சில வருஷத்துக்கு முன்னாடி புறக்காவல் நிலையம் திறந்தாங்க... இது, ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டுல செயல்படுது பா...
''இங்க, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புக்கு இருக்கிறதோட, அடிதடி, விபத்துல சிக்கி சிகிச்சைக்கு வர்றவங்க குறித்த விபரங்களை திரட்டி, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தரணும் பா... ஆனா, இந்த புறக்காவல் நிலையத்துல வயதான மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட போலீசாரையே போடுறாங்க பா...
''மருத்துவமனையில் பிரச்னைகள், தகராறு நடந்தா, இவங்க சமாளிக்க முடியாம சிரமப்படுறாங்க... இதனால, 'ஆக்டிவான, இளம் வயது போலீசாரை நியமிக்கணும்'னு, மருத்துவமனை ஊழியர்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''வேலை செய்றதும், கண்காணிக்கிறதும் ஒரே ஆளா இருந்தா உருப்படுமா வே...'' என கேட்டபடியே, கடைசி மேட்டரை தொடர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி...
''துாத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்டத்தில் உதவி இன்ஜினியரா ஒருத்தர் இருக்காரு... இவரே, அரசு பணிகளை சப் கான்ட்ராக்ட் எடுத்தும் செய்யுதாரு வே...
''அந்த பணிகளை கண்காணிக்கிறதும் இவராகவே இருப்பதால், தரமில்லாம பணிகளை செய்துட்டு, பணத்தை வாங்கிடுதாரு... இதுக்கு முன்னாடி, வைப்பார் வடிநில கோட்டத்தில் இருந்தப்ப, வேம்பார் தடுப்பணை கட்ட டெண்டர் எடுத்த நிறுவனத்திடம், சப் கான்ட்ராக்ட் எடுத்து பணிகளை செய்தாரு வே...
''ஆனா, தரமற்ற பணிகளால அந்த தடுப்பணை இடிஞ்சு விழுந்துட்டு... இப்பவும், கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்டத்தில், ஆற்றை புனரமைக்கும் பணிக்காக, நபார்டு திட்ட நிதி 12.50 கோடியில் பணிகளை எடுத்த நிறுவனத்திடம் சப் கான்ட்ராக்ட் எடுத்து, தரமில்லாம பணிகளை செய்துட்டு இருக்காரு வே...
''உள்ளூர் பெண் எம்.பி.,யின் உதவியாளரா இருக்கிறவருக்கு இவர் உறவினராம்... அதனால, இவர் மேல நடவடிக்கை எடுக்க நீர்வளத் துறை அதிகாரிகள் தயங்குதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''பாலமுருகன், பிரவீன் இப்படி உட்காருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.