Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பத்திரிகை அலுவலகத்துக்கு தீ சந்திரபாபு கட்சியினர் அடாவடி

பத்திரிகை அலுவலகத்துக்கு தீ சந்திரபாபு கட்சியினர் அடாவடி

பத்திரிகை அலுவலகத்துக்கு தீ சந்திரபாபு கட்சியினர் அடாவடி

பத்திரிகை அலுவலகத்துக்கு தீ சந்திரபாபு கட்சியினர் அடாவடி

PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM


Google News
விசாகப்பட்டினம், ஆந்திராவில் பிரபல ஆங்கில பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலை தனியார்மயமாக்கப்படுவது குறித்து, அங்குள்ள 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில பத்திரிகை சமீபத்தில் செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

இதனால், ஆத்திரமடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் நேற்று அந்த பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

அலுவலக சுற்றுச்சுவர் மீது ஏறிய அவர்கள், பெயர் பலகையை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேனர்களுக்கு தீ வைத்தனர்; அலுவலகத்தையும் சூறையாடினர். இந்த சம்பவத்துக்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:

பத்திரிகை அலுவலகத்துக்கு தீ வைத்தது கோழைத்தனமான செயல். பாரபட்சமின்றி செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஊடகங்களை ஒடுக்குவதற்கான முயற்சி இது. புதிய ஆட்சியில், ஆந்திராவில் ஜனநாயகம் சீர்குலைந்து கொண்டே செல்கிறது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ் கூறுகையில், ''ஆங்கில பத்திரிகையில் வந்த கட்டுரை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க போலியானது.

''தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், விசாகப்பட்டினம் எக்கு ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. தெலுங்கு தேசம் கட்சியினர் பொறுமை காக்க வேண்டும்,'' என்றார்.

டெக்கான் கிரானிக்கிள் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, இந்திய பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us