Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /திருவள்ளூர்/திருவள்ளூர்: புகார் பெட்டி;பரிதாப நிலையில் வெளிவட்ட இணைப்பு சாலை

திருவள்ளூர்: புகார் பெட்டி;பரிதாப நிலையில் வெளிவட்ட இணைப்பு சாலை

திருவள்ளூர்: புகார் பெட்டி;பரிதாப நிலையில் வெளிவட்ட இணைப்பு சாலை

திருவள்ளூர்: புகார் பெட்டி;பரிதாப நிலையில் வெளிவட்ட இணைப்பு சாலை

ADDED : ஆக 06, 2024 02:17 AM


Google News
Latest Tamil News

பரிதாப நிலையில் வெளிவட்ட இணைப்பு சாலை


திருமழிசை அடுத்த நசரத்பேட்டை அருகே உள்ளது மலையம்பாக்கம் கிராமம்.

இங்கிருந்து வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில் ஒன்றிய சாலை உள்ளது.

இந்த சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து பரிதாபமான நிலையில் உள்ளது.

இதனால் இவ்வழியே மாங்காடு செல்லும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து பரிதாபமான நிலையில் உள்ள ஒன்றிய சாலையை சீரமைக்க வேண்டும்.

-- பா. பூபாலன், திருமழிசை.

புறவழிச்சாலையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?


திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, 47 கோடி ரூபாயில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பட்டாபிராமபுரத்தில் இருந்து அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு புறவழிச்சாலை அமைத்து கடந்த மாதம் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

இச்சாலையில், 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்து ரக வாகனங்கள் தற்போது சென்று வருகிறது.

இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மேம்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

- அ.முனுசாமி, திருத்தணி.

பக்தர்கள் தங்கும் மண்டபம் சீரமைக்கப்படுமா?


சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ் சாலை திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடந்து செல்லும் பக்தர்கள் தங்கியும், ஓய்வு எடுத்து செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த மண்டபத்தில் தண்ணீர் வசதியும் இருந்தது. தற்போது மண்டபம் பழுதடைந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும் அந்த மண்டபத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு போதிய வழியில்லாததால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். எனவே முட்புதரில் நடுவில் உள்ள மண்டபத்தை சீரமைக்கவேண்டும்.

-எம்.சரத்குமார், திருத்தணி.

ரேஷன் கடையை சூழ்ந்த செடிகள்


திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமம் பேரம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது ரேஷன் கடை. இப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கட்டடத்தை சுற்றி செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் உள்ளதால் அப்பகுதிவாசிகள் அச்சமடைந்து உள்ளனர். எனவே செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே. விநாயகம், மணவூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us