ADDED : ஜூலை 15, 2024 11:02 PM

கோவில் வளாகத்தில்
பன்றிகள் உலா
திருத்தணி அடுத்த மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து மூலவர் அம்மனை, தரிசித்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில், அன்னதான கூடம் மற்றும் பொங்கல் வைக்கும் இடம் ஆகிய இடங்களில் பன்றிகள் சுற்றி வருகின்றன.
மேலும் அன்னதான கூடம் அருகே பன்றிகள் ஒன்றாக படுத்து ஓய்வுவெடுக்கின்றன. இதனால் பக்தர்களுக்கு சுகாதார சீர்கேடு உருவாகுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகள் உலா வருவதை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து தடுக்க வேண்டும்.
--எஸ்.வெங்கடேசன், மத்துார்.
ஏ.டி.எம்., மையம்
திறக்கப்படுமா?
திருமழிசை குண்டுமேடில் பாரத ஸ்டேட் வங்கியில் 'இ- கார்னர்', ஏ.டி.எம்., இயந்திரம் பயன்படுத்த இடம் ஒதுக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது.
இங்கு திருமழிசை பேரூராட்சி மற்றும் தொழிற்பேட்டை தொழிலாளர்கள் வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். இங்கு ஏ.டி.எம்., இயந்திரம் இல்லாததால் மற்ற வங்கி கிளையை நாட வேண்டி உள்ளது. எனவே, இங்கு இ- கார்னர் ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்க வேண்டும்.
- ந.கோதைஜெயராமன், நசரத்பேட்டை
சாலை தடுப்புகளில்
சூழ்ந்துள்ள செடிகள்
பெரியபாளையம் அருகே, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சாலை வளைவில், தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இதில் அதிகளவு செடிகள் வளர்ந்து தடுப்புகளை மறைத்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு தடுப்புகள் தெரியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை தடுப்புகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும்.
- -என்.கோகுலகிருஷ்ணன், பெரியபாளையம்.
பாழடைந்த கட்டடங்களை
இடிக்க வேண்டும்
சோழவரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், பல்வேறு கட்டடங்கள் பாழடைந்து பயன்பாடு இன்றி கிடக்கின்றன. கட்டடங்கள் ஓட்டை உடைசல்களுடனும், புதர் மண்டியும் இருக்கின்றன.
கட்டடங்கள் மீது மரங்கள் வளர்ந்து உள்ளன. எப்போது வேண்டுமானாலும் கட்டடங்கள் இடிந்துவிழும். இதனால் அசம்பாவிதங்கள் நேரிடும். மழைக்காலம் நெருங்கும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க இதுபோன்ற பாழடைந்த கட்டடங்களை இடிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.முரளி, சோழவரம்
நிழற்குடை இல்லாமல்
நேமம் பகுதிவாசிகள் அவதி
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில்வெள்ளவேடு அருகே அமைந்துள்ளது, நேமம் கிராமம்.இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்து நிற்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் ஓலையால் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையால் மழை நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப. வீரன், நேமம்.