ADDED : ஜூலை 29, 2024 10:02 PM

வேகத்தடை அருகே சிதறியுள்ள ஜல்லிக்கற்களால் விபத்து அபாயம்
சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில், வேகத்தடை உள்ளது.
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள், வேகத்தடை மீது செல்லும்போது, ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறுகின்றன. இவ்வாறு, வேகத்தடை அருகே ஜல்லிக்கற்கள் சிதறி உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் சிதறி உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நா.ராமமூர்த்தி,
மதுராந்தகம்.
எரிக்கப்படும் குப்பை கழிவுகள் காயரம்பேடு ஊராட்சி அலட்சியம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி, விஷ்ணுபிரியா நகர் - நெல்லிக்குப்பம் பிரதான சாலையோரம், குப்பை தேங்கியுள்ளது.
ஊராட்சி நிர்வாகம், தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அதில் தீ வைத்து எரிக்கிறது. அதனால், அதிலிருந்து வெளியேறும் புகை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கும் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
எனவே, தேங்கிய குப்பையை தீ வைத்து எரிக்காமல், உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.காமாட்சி, விஷ்ணுபிரியா நகர்.
நந்திவரம் ராணி அண்ணா நகரில் சேதமான மின் கம்பங்களால் ஆபத்து
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட ராணி அண்ணா நகர் இரண்டாவது தெருவில், மிகவும் ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன.
இதை மாற்றித் தரக்கோரி, கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்திருந்தோம். ஆனால், இதுவரை அவற்றை மாற்ற, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வரும் மழைக்காலத்திற்குள், அவற்றை மாற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்பழகன்,
நந்திவரம்.
மின்கம்பியில் படரும் கொடிகள் கண்டுகொள்ளாத மின்வாரியம்
திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலையில், கரும்பாக்கம் அருகே சாலையோரம் மின் கம்பம் உள்ளது. இந்த மின் தட கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளன. அதனால், மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த மின்கம்பம் இருக்கும் பிரதான சாலை வழியாக, மின் ஊழியர்கள் பலர் செல்கின்றனர். ஆனாலும், கொடி படர்ந்த மின் கம்பி யார் கண்களிலும் தென்படவில்லையா என, அப்பகுதிவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெரிய அளவிலான மின் விபத்து ஏற்படும் முன், மின் கம்பியில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ஜனார்த்தனன்,
கரும்பாக்கம்.