/தினம் தினம்/சொல்கிறார்கள்/ கலையில் உயர்ந்தது, கீழானது என எதுவுமில்லை! கலையில் உயர்ந்தது, கீழானது என எதுவுமில்லை!
கலையில் உயர்ந்தது, கீழானது என எதுவுமில்லை!
கலையில் உயர்ந்தது, கீழானது என எதுவுமில்லை!
கலையில் உயர்ந்தது, கீழானது என எதுவுமில்லை!
PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

பறை இசையில் பட்டையை கிளப்பும், கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் சோழன்: விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் கிராமம் தான் என் சொந்த ஊர். நடுத்தர குடும்பம். சிறு வயது முதலே திருவிழாக்களுக்கு செல்லும்போது, பறையிசை அடிப்பதை பார்த்தால் அங்கேயே நின்று ரசிப்பேன்.
அப்போது இருந்தே பறை இசைக்கணும் என்ற ஆசை எழுந்தது. ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
கொரோனா ஊரடங்கு காலத்தில் எனக்கு, 14 வயது. என் நண்பர்கள் அனைவரும் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடந்தனர்.
ஆனால், நான் ரொம்ப ஆசைப்பட்ட பறையை அப்போது கற்று கொள்ளலாம் என்று தோன்றியது. எல்லாரும், 'இது உனக்கு தேவையா?' என்று கேட்டனர். அதை நான் கண்டுகொள்ளவில்லை.
பறையிசை கலைஞர் அன்பரசன் என்பவரிடம் சென்று, 'எனக்கும் சொல்லி கொடுங்க' என்றேன். அவர் தட்டி கொடுத்து, கற்றுக் கொடுத்தார்.
சிறிது காலம் ஆனவுடன், அவரது பறையிசை குழுவில் என்னை சேர்த்து கொண்டார். எங்கள் குழுவில் இப்போது 30 பேர் இருக்கிறோம்.
வெளியூரில் இருந்து வெளிமாநிலங்கள் வரை, ஐந்து ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளிலும் பறை இசைத்து வருகிறோம்.
நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, தங்கும் இடத்திலிருந்து தண்ணீர் வரை எல்லாம் கஷ்டம் தான். ஆனாலும் டீமிலேயே நான் தான் ஜூனியர் என்பதால், என்னை அனைவரும் நன்கு பார்த்துக் கொள்வர்.
நிகழ்ச்சிகளால் என் படிப்பு பாதிக்காத வகையில், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் தான் பெரும்பாலும் செல்வேன். ஒருமுறை நிகழ்ச்சிக்கு சென்றால், 600 முதல் 1,500 ரூபாய் வரை கிடைக்கும்.
குடும்ப செலவு, கல்லுாரி கட்டணம் என அனைத்திற்கும் இது மிகவும் கைகொடுக்கிறது. சிலர் பறையிசை ஏதோ இழிவானது போன்று பேசுவர்.
கலையில் உயர்ந்தது, கீழானது என்று எதுவும் இல்லை. மனிதர்களிலும் உயர்ந்தவர்கள், கீழானவர்கள் என யாரும் இல்லை. நம் உயரத்தை, நம் மனம் தான் சொல்ல வேண்டும்.
என் வீட்டில், நான் பறை இசைப்பதை மகிழ்ச்சியுடன் உற்சாகப்படுத்துகின்றனர். படிப்பு முடித்ததும், வேலை என ஒருபக்கம் பயணித்தாலும், இந்த கலையில் விருதுகள் எல்லாம் வாங்க வேண்டும். என்னை போல் ஆர்வம் உள்ள பலருக்கும் இதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை.