/தினம் தினம்/சொல்கிறார்கள்/ நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததால் லாபம் வந்தது! நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததால் லாபம் வந்தது!
நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததால் லாபம் வந்தது!
நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததால் லாபம் வந்தது!
நேரம், காலம் பார்க்காமல் உழைத்ததால் லாபம் வந்தது!
PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

பூக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள, திண்டிவனம் அருகே உள்ள கொணக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலன் - ஞானசவுந்தரி தம்பதி:
பாலன்: நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, அப்பா இறந்து விட்டார். அதன்பின் என்னால் படிக்க முடியவில்லை. விவசாய வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்.
நான் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, 30 சென்ட் நிலம் வாங்கியபோது, மனதிற்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
நான் வாங்கிய நிலத்தில், நிலக்கடலை, உளுந்து, காராமணி, கரும்பு என, நிறைய பயிரிட்டேன்; ஆனால், நஷ்டம் தான் ஏற்பட்டது.
இதற்கு நடுவில் எனக்கு திருமணமானது. என் மனைவியிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் என் வாழ்க்கையில் நடந்தது, நான் முயற்சி செய்தது, தோற்றது என அனைத்தையும் கூறினேன்.
ஓலைக்குடிசையில் இருந்த நாங்கள், தற்போது ஊரில் பெரிய வீடாக கட்டி இருக்கிறோம். என் வெற்றிக்கு காரணம் மனைவிதான். வாழ்க்கைத் துணை, ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருப்பது அவசியம்.
ஆனால், அது மட்டுமே போதாது... இருவருமாக சேர்ந்து முன்னேற, சிந்தனையில் இருந்து உழைப்பு வரைக்கும் ஒருவருக்கு ஒருவர் துணையாக, ஆதரவாக, பலமாக இருக்க வேண்டும். நாங்கள் போட்டு இருக்கிற பாதையும் அதுதான்!
ஞானசவுந்தரி: என்னை திருமணம் செய்த காலத்தில், அவருக்கு எதிர்காலம் மீது சிறிது பயம் இருந்தது. சிறு வயதில் இருந்தே உழைத்ததால், எப்போது தான் முன்னேறுவோம் என்று அவர் மனதில் ஒரு சோர்வு இருந்தது. இதற்கு நடுவில் மனைவியாக வந்திருப்பவளும் ஏதாவது எதிர்பார்த்தால், என்ன செய்வது என்ற கலக்கம் இருந்தது.
'உங்கள் இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம் என எல்லாவற்றிலும் உங்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவு இனி எனக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியதும் தான் தெளிவடைந்தார்.
எங்கள் ஊர், பூ விவசாயத்துக்கு பெயர் பெற்றது. அதனால், நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி, எங்கள் நிலத்தில் பயிர்களுக்கு பதிலாக பூங்கன்றுகளை நடலாம் என முடிவெடுத்தோம்.
களை எடுப்பது, உரம் போடுறது, பூ பறிக்கிறது என இருவரும் நேரம், காலம் பார்க்காமல் உழைத்தோம். எதிர்பார்த்தது போலவே எங்கள் பூமி லாபம் தர ஆரம்பித்தது. 30 சென்ட் நிலத்தில் மாதம் 30,000 ரூபாய் வருமானம் பார்க்கிறோம்.
நாங்கள் இருவருமே பெரிதாக படிக்கவில்லை. அதனால், எங்கள் இரு மகன்களையும் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க வேண்டும், அவர்கள் வாழ்க்கையில் நன்றாக முன்னேற வேண்டும், அதற்கேற்ற மாதிரி உழைக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்து வளர்க்கிறோம்.