PUBLISHED ON : ஜூன் 09, 2025 12:00 AM

சென்னை, எத்திராஜ் கல்லுாரியின் ஆங்கில துறை பேராசிரியை திவ்யா ஸ்ரீ:
ஆரம்பத்தில், 'டேபிள் டென்னிஸ்' விளையாடிட்டு இருந்தேன். பின், பாஸ்கெட் பாலுக்கு மாறிட்டேன். பள்ளியில் படிக்கும் போது, ஜப்பானில் நடந்த சர்வதேச போட்டியில், 'ஜூனியர் இந்தியா லெவலில்' பங்கேற்றேன். ஆசிய, 'பாஸ்கெட் பால் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினேன்.
பள்ளிப் படிப்பு முடித்ததும், எத்திராஜ் கல்லுாரியில், 'இங்கிலிஷ் லிட்டரச்சேரில்' சேர்ந்தேன்.
மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில், சென்னை பல்கலைக்காக விளையாடி இருக்கிறேன். அப்போது என் 'கேப்டன்சி'யில் தான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள், 'ஆல் இந்தியா' போட்டியில் ஜெயித்தோம்.
ஒரு பல்கலைக்காக ஒருவர் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் விளையாடலாம். அதனால், 'யு.ஜி., - பி.ஜி., - எம்.பில்.,' என, தொடர்ந்து அதே கல்லுாரியில் படித்தேன். அதன்பின், அதே கல்லுாரியில் பணிக்கு சேர்ந்தேன். திருமணம், இரண்டு பிள்ளைகள் என ஆனதும், பாஸ்கெட் பாலுக்கு, 'பிரேக்' விட்டு விட்டேன்.
மீண்டும், 2018ல் விளையாடத் துவங்கினேன். அப்போது தான், 30 வயதிற்கு மேல் உள்ளோர் விளையாடும், 'மாஸ்டர்ஸ் பாஸ்கெட் பால்' சங்கத்தை இந்தியாவில் துவங்கி, போட்டிகள் நடத்தினர். அதில் பங்கேற்று, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஜெயித்தோம்.
என்னிடம் பலரும், 'மல்டி டாஸ்க்கிங் செய்ய எப்படி நேரம் கிடைக்கிறது...' என்று கேட்கின்றனர்.
நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதற்கு நேரத்தை கண்டிப்பாக ஒதுக்கி விடுவோம். எந்த விஷயத்துக்கு எப்போது நேரம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டோம் எனில், எல்லாவற்றையுமே செய்ய முடியும். அப்படி தான் என் வேலைகளை பிரித்துக் கொள்கிறேன்.
நம் உடல் ஒரு 'மிஷின்' போன்றது. அதை பயன்படுத்தவில்லையெனில் துருப்பிடித்து விடும். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கலாம்.
வயது ஆக ஆக எலும்பின் அடர்த்தியும், தசைகளின் அடர்த்தியும் குறையும். இதனால், படியேறுவது, உட்கார்ந்து எழுந்து கொள்வது போன்ற சிறு விஷயங்கள் கூட கஷ்டமாகி விடும். இதெல்லாம் இல்லாமல், வலி இல்லாமல், 'ஸ்ட்ரெஸ்' இல்லாத வாழ்க்கை வாழ வேண்டுமெனில், 'பிட்னெஸ்' மிகவும் அவசியம்.
நம் வயது, திறனுக்கேற்ற விஷயங்களை எப்போதும் செய்தபடியே தான் இருக்க வேண்டும். 'ஸ்போர்ட்ஸ்' என்று இல்லை; இசை, 'தியேட்டர் ஆர்ட்ஸ்' என உங்களுக்கு பிடித்த விஷயங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.