/தினம் தினம்/சொல்கிறார்கள்/ மசாலா உணவுகள் பேக்கரி பண்டங்கள் குறைப்பது நல்லது! மசாலா உணவுகள் பேக்கரி பண்டங்கள் குறைப்பது நல்லது!
மசாலா உணவுகள் பேக்கரி பண்டங்கள் குறைப்பது நல்லது!
மசாலா உணவுகள் பேக்கரி பண்டங்கள் குறைப்பது நல்லது!
மசாலா உணவுகள் பேக்கரி பண்டங்கள் குறைப்பது நல்லது!
PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

தற்போது வரை நீடித்து வரும், வெப்ப அலையின் பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு குறித்து கூறும் மருத்துவர் கு.கணேசன்:
வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்கிறவர்களுக்கும், சாலையில் நடந்து செல்லும் வயதானவர்களுக்கும், உடலின் வெப்பம், 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும்.
களைப்பு உண்டாகும். இதற்கு, 'வெப்பத் தளர்ச்சி' என்று பெயர். இந்நேரத்தில் அவர்கள் நிழலுக்கு வந்து ஓய்வெடுத்து, போதிய அளவு திரவ ஆகாரங்களை குடித்துவிட்டால் தளர்ச்சி குறையும்.
தவறினால், திடீரென்று உடல் வியர்த்து மயக்கம் வந்துவிடும். பாதிக்கப்பட்டவருக்கு உடன் முதலுதவி தரவேண்டியது முக்கியம்.
முதலில் பாதிக்கப்பட்டவரை நிழல் உள்ள இடத்துக்கு அழைத்து சென்று, ஆடைகளை தளர்த்தி, காற்று உடல் முழுதும் படும்படி செய்யுங்கள்.
குறிப்பாக, அவரைச் சுற்றி கூட்டம் சேருவதைத் தவிருங்கள். கால்களுக்கு அடியில் தலையணை கொடுத்து, உடலின் கீழ்ப்பாகத்தை உயர்த்துங்கள். தலைக்கு தலையணை தேவை இல்லை.
அடுத்து, தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதையும் துடைக்கவும். அவருக்கு சுய நினைவு இருந்தால், காபி, டீ போன்றவற்றை தவிர்த்து, நிறைய தண்ணீர், இளநீர், சர்பத், உப்பு போட்ட மோர், பழச்சாறு போன்றவற்றை குடிக்க கொடுங்கள்.
அப்படியும் மயக்கம் தெளியவில்லை என்றால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.
வெயிலை சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும் 3 - 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
செயற்கை பானங்களை குடிப்பதைவிட மோர், பதநீர், பழச்சாறு, பானகம், இளநீர் ஆகிய இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப்படுத்துங்கள்.
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடிப்பதும், சர்பத் குடிப்பதும், இஞ்சி கலந்த மூலிகை தேநீர் அருந்துவதும் நல்லது.
வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளிப்பதும், தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதும் நல்லது. வெளியில் செல்லும்போது தொப்பி அல்லது குடையோடும், தண்ணீர் பாட்டிலோடும் செல்ல வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குறைந்தவர்கள் வெயிலில் அலைவது கூடாது. இருசக்கர வாகனங்களில், வெயிலில் அதிக நேரம் பயணிப்போர், குளிர் கண்ணாடி அணியலாம்.
காரம், மசாலா நிறைந்த உணவுகள், மைதா உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரி பண்டங்கள், பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், அசைவம் ஆகியவற்றை குறைத்துக் கொள்வது நல்லது.
இட்லி, இடியாப்பம், மோர் சாதம், கம்பங்கூழ், கேப்பைக்கூழ், வெங்காய பச்சடி, கீரைகள், பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி, நுால்கோல், பீர்க்கை, புடலை ஆகியவை வெயிலுக்கு ஏற்ற உணவுகள்.