Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ விவசாயிகளும் முதலாளிகளாக மாற முடியும்!

விவசாயிகளும் முதலாளிகளாக மாற முடியும்!

விவசாயிகளும் முதலாளிகளாக மாற முடியும்!

விவசாயிகளும் முதலாளிகளாக மாற முடியும்!

PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் மாவட்டம், பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லை மகளிர் குழுவை சேர்ந்த, காளியம்மாள் - சின்னம்மாள்:

காளியம்மாள்: எங்கள் கிராமத்தில் விவசாயம் தான் பிரதான தொழில். எங்கள் காலத்தில் எட்டாவது, ஒன்பதாவதோட படிப்பை நிறுத்தி விடுவோம்; அந்த வயதில் அது பெரிதாக தெரியவில்லை.

ஆனால், இப்போது நாலு இடத்துக்கு போகும்போது, ஒரு விண்ணப்பம் கூட நிரப்ப தெரியாமல் நிற்கிற போது, படித்திருக்கலாம் என்று தோன்றும்.

இந்த குழுவில் உள்ள, 20 பேருமே பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி, விவசாயக் கூலிகளாக வேலைக்கு வந்தவர்கள் தான். ஆனால், இன்று எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்.

இக்குழுவை 2019-ல் துவங்கினோம். எங்கள் 20 பேரில், 13 பேருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கு. அவரவர் நிலத்தில் தனித்தனியாக கேழ்வரகு, சாமை உற்பத்தி செய்து கடைகள், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளோருக்கு விற்றுக் கொண்டு இருந்தோம்.

கடையில் 1 கிலோ, 90 ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளை எங்களிடம், அவர்கள், 45 ரூபாய்க்கு வாங்குவர். நாங்களும், அன்றாட சாப்பாட்டுக்கு காசு வேண்டும் என்பதால், கிடைக்குற லாபத்துக்கு பொருளை விற்றுக் கொண்டு இருந்தோம்.

ஆனால், தற்போது ஒரு குழுவாக இணைந்து, ஒன்பது வகையான சிறுதானிய விதைகளை ஆண்டிற்கு, 14 டன் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம்.

குழு தலைவர் சின்னம்மாள்: தனித்தனியாக இருக்கும் விவசாய பெண்களை ஒன்று சேர்ந்து, ஐந்துக்கும் மேற்பட்ட சிறுதானிய விதைகளை டன் கணக்கில் உற்பத்தி செய்து கொடுத்தால், மானியத்துடன், விலைக்கு வாங்கிக் கொள்வதாக அரசு அதிகாரிகள் கூறினர்.

அதனால், நிலம் இருக்கும், 13 பேரும் சம்மதித்தனர். மீதி உறுப்பினர்கள், எங்களுக்கு உதவி செய்து, லாபத்தை பகிர்ந்து கொள்ள வந்தனர்.

குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் நிலங்களையும் சேர்த்து, எங்களிடம், 10 ஏக்கர் இருந்தது. வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து மானியத்தில் விதைகள் வாங்கினோம்.

ஓர் ஏக்கருக்கு, 5 கிலோ விதைகளை மானியத்துடன் தருகின்றனர். கேழ்வரகு, சாமை, கம்பு, சோளம், பச்சைப்பயறு உள்ளிட்ட ஒன்பது வகையான சிறுதானியங்களை பயிரிட்டோம்.

நாங்கள் விளைவிக்கும் விதைகளை, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்துடன் வாங்கிக் கொள்கின்றனர். தானியங்களாக விற்பதை விட, விதைகளாக விற்பனை செய்வதில், இரு மடங்கு லாபமும் கிடைக்கிறது. லாபத்தை அவரவர் உழைப்பு, நில முதலீட்டுக்கு ஏற்ப பிரித்துக் கொள்கிறோம்.

மிகப்பெரிய விதை உற்பத்தி பண்ணையாக உருவெடுக்கணும் என்பது தான் எங்கள் இலக்கு. முயற்சி செய்தால், விவசாயிகள் முதலாளிகளாகவும் மாறலாம் என்பதற்கு நாங்களே உதாரணம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us