PUBLISHED ON : ஜூன் 09, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
தமிழகம் இதுவரை
கண்டிராத, மிகவும் அநியாயமான, ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை வழி நடத்தும்
பொம்மை முதல்வர் ஸ்டாலின், 'நியாயமான தொகுதி மறுவரையறை' குறித்து
பேசுகிறார். முதலில் அவர், 'டாஸ்மாக்' கொள்ளையை, போதைப்பொருள் மாபியாவை,
சட்ட விரோத மதுபானத்தை, ரவுடியிசத்தை, தி.மு.க., அமைச்சர்களின் ஊழலை,
தி.மு.க., தலைமை குடும்பத்தின் ஆணவத்தை, அவர்களின் தமிழகத்தின் மீதான
பிடியை பற்றி பேச வேண்டும்.
அவருக்கு பயமில்லாம போனதுக்கு காரணம்,
எதிர்க்கட்சியா இருக்க வேண்டிய உங்க கட்சி, பம்மிட்டு நிக்கிறது தானே...
'தி.மு.க., ஆட்சியோட அராஜகங்களை எதிர்த்து, சாலையில நின்னு மறியல்
செய்வோம்'ன்னு கர்ஜிக்க இவருக்கு தெம்பே இல்லையே... ஏன்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதே வேளையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை பல ஆண்டுகளாக காற்றில் பறக்க விட்ட மாநிலங்களோ, பார்லிமென்டில் கூடுதல் எம்.பி.,க்களை பெற இருக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, 15 ஆண்டு காலமாச்சு. இதில் எந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அதுக்கப்புறமா நடந்த நான்கு தேர்தல்கள்ல, தி.மு.க., ஓட்டு கேட்டிருக்கும்ன்னு புரியலே... மக்கள் தொகை அதிகமாகி இருந்தாலும், இக்கட்சியோட, 27 சதவீத ஓட்டுக்கு பாதகம் வராதே... பின் ஏன் இப்படி பயப்படுறாருன்னு புரியலியே?
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
'அமித் ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது' என்கிறார் முதல்வர் ஸ்டாலின். அந்த, 'ஷா' தான் மஹாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தார்; டில்லியிலும் ஆட்சி மாற்றம் செய்தார்.
புலி வருது, புலி வருதுன்னு சொல்லி சொல்லியே, பா.ஜ., கட்சிக்காரங்க உஷாராகுறாங்களோ இல்லையோ, மத்த கட்சிக்காரங்க தேர்தல் வேலையில இறங்கி, ஓட்டை அள்ளிடப் போறாங்க... பா.ஜ., வழக்கம் போல, உள்ளடி வேலை, குஸ்தி, ஈகோன்னு, சொந்த கட்சிக்காரங்க காலையே வாரி விடுற வேலையை செஞ்சிட்டு, ஓட்டு வாங்காம கோட்டை விடப் போகுதுங்கிறது நல்லா புரியுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி:
'ஆடிட்டர்' குருமூர்த்தி நீண்ட கால நண்பர். நான் மிகவும் மதிக்கும் நபர்; நல்ல மனம் கொண்டவர்; அறிவாளி. அவர் சொன்னால், நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். சைதை துரைசாமி, 30 ஆண்டு கால நண்பர். இருவரும் தைலாபுரம் வந்து என்னுடன் பேசினர்.
மூன்றாம் நபர் தலையிட்டால் தான் குடும்ப பிரச்னை தீரும்ங்கிறது எழுதப்படாத விதியாயிடிச்சு போலிருக்கு. இவர், இன்னும் என்னென்னவெல்லாம் சால்ஜாப்பு சொல்லப் போறார்ன்னு, கூட்டணி முடிவாகுறதுக்குள்ள பார்க்கத்தானே போறோம்!