PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: திருப்பரங்குன்றத்தில்
நடக்கவுள்ள முருகன் மாநாடு, சங்கிகள் நடத்தும் மாநாடு; அது, அரசியல்
மாநாடு. அரசு நடத்திய முருகன் மாநாட்டில், 27 நாடுகளைச் சேர்ந்த முருக
பக்தர்கள் பங்கேற்றனர்.
பா.ஜ., தலைவராக முருகன் இருந்தபோது நடந்த
வேல் யாத்திரையின்போதே உங்களுக்கு வயிறு கலங்கிடிச்சு... அதுக்கப்புறம்
தானே, கோவில் விவகாரங்கள்ல அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பிச்சீங்க... இப்போ,
ஹிந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் நடத்தப் போற மாநாடும், 'ஓஹோ'ன்னு
வெற்றி அடையும்கிற உளவு அறிக்கை கையில கிடைச்சுருச்சோ... அதான், சங்கி,
மங்கின்னு புலம்ப ஆரம்பிச்சிட்டீங்க!
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து, உலகில் உள்ள பல நாடுகளில், தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. என் தலைமையிலான குழுவினர், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறினோம். இந்தியாவின் குரலாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் எடுத்துரைத்தோம்.
நல்ல காரியம் செஞ்சீங்க! கூடவே, 'நம் நாட்டு தேசிய மொழி, வேற்றுமையில் ஒற்றுமை' என்று சொல்லி, உலக நாடுகளை உங்களைத் திரும்பிப் பார்க்க வச்சிட்டீங்க; மிகமிக நல்லது!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால், அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? தமிழ் திரையுலகின் பெருமைமிக்க கலை அடையாளமான கமலுக்கு வரலாறு தெரியவில்லை என, சித்தராமையா அவமதிக்கிறார். சித்தராமையாவுக்கு பதிலடி தரவேண்டிய முதல்வர் ஸ்டாலின், இதுவரை வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைப்பிடிப்பதன் வாயிலாக, கமலை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதித்து விட்டார்.
வீண்வம்பை விலைக்கு வாங்கக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாய் இருக்கிறார்னு புரிஞ்சிக்கணும். அவ்வளவு ஏன்... கர்நாடகாவில், ஐ.பி.எல்., வெற்றி பாராட்டு விழாவில் நடந்த கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகி இருக்காங்க; நம்மாளு வாயே திறக்கலியே! 'பிரெண்ட்லி' முதல்வர் என்ற கணக்காம்!]
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ரயில்வே துறை என்பது, மக்களுக்கு சேவை செய்வதற்காக துவக்கப்பட்டது. இதில் லாப நோக்கம் இருக்கக்கூடாது. எனவே, சாதாரணப் பெட்டிகளை நீக்கி விட்டு, 'ஏசி' பெட்டிகளை அதிகரிக்கும் திட்டத்தை, ரயில்வே கைவிட வேண்டும்.
அடிக்கிற வெயிலுக்கு, குடிசையில கூட, 'ஏசி' போட்டுட்டு மக்கள் உட்கார ஆரம்பிச்சிட்டாங்க... இதுபோல பழைய பஞ்சாங்க அறிக்கைகளை விட ஆரம்பிச்சா, உங்கப்பா நீச்சல் அடிச்ச போட்டோவை ஆளாளுக்கு போஸ்டர் ஒட்டி, உங்களை கலாய்க்க ஆரம்பிச்சிடுவாங்க... பார்த்துக்குங்க!