PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: தேசிய
கல்விக் கொள்கை திட்டப் புத்தகத்தில், ஹிந்தி மொழி திணிப்பு என்ற வாசகம்
இருந்தால், நான் 1 லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன். தாய்மொழி கொள்கையை
வலியுறுத்துவது தான் தேசிய கல்விக் கொள்கை ஆகும். மும்மொழி திட்டம் ஏற்கனவே
தமிழகத்தில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 35 லட்சம் மாணவ - மாணவியர்
தமிழகத்தில் படித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு இதில் அரசியல் செய்ய
வேண்டாம்.
அந்த 35 லட்சம் மாணவ - மாணவியரிலும் முக்கால்வாசி பேர், தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கிறவங்களா தான் இருப்பாங்க!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அறிக்கை: தமிழக அரசின் எம்.பி.,க்கள், முதலில் தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, தொகுதியில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டு, பின்பு தொகுதி வரையறை பற்றி பேச வேண்டும். தங்கள் தொகுதியில் உள்ள மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதற்கு எம்.பி.,க் கள் முன்வர வேண்டும்.
கேட்டா, 'அதுக்கும், மத்திய அரசு நிதி ஒதுக்க மாட்டேங்குது' என்று தான் குறை சொல்லுவாங்க!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு செயலர் முரளி அப்பாஸ் பேட்டி: தி.மு.க.,வை விஜய் சாடினால் அதற்கு பதில் சொல்லும் வலிமை தி.மு.க.,வுக்கு இருக்கிறது. தி.மு.க.,வை தாக்குவதால், விஜயை நாங்கள் விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள், விஜயை விமர்சிக்கிறதே என்ற கேள்வியை எங்களிடம் கேட்டால், பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். எனவே, த.வெ.க.,வை விமர்சிக்க வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு இல்லை.
'தி.மு.க., தர்ற ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு போய், விஜயை பகைச்சுக்க நாங்க விரும்பலை'ன்னு சொல்லாம சொல்றாரோ?
தமிழக பா.ஜ.., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: மத்திய அரசு நடத்தும் மத்திய ஆயுத காவல் படை தேர்வுகளில் தமிழுக்கு இதுவரை இடம் இல்லாமல் இருந்தது. தற்போது இத்தேர்வை கன்னடம், தமிழ், பெங்காலி போன்ற மொழிகளில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மத்திய அரசு, மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதற்கு, இது, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்.
இப்படி தமிழில் எழுத வழிவகை செய்தும், நம்ம ஊர் இளைஞர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றதாக தெரியலையே... இதுல இருந்தே, தமிழ்லயும் அவங்க, 'வீக்'கா இருப்பது தெரியுதே!