PUBLISHED ON : ஜூலை 17, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தண்ணீரே
குடிக்காமல் 3 மணி நேரம் பேசும் பிரதமர் மோடியை, 13 முறை தண்ணீர் குடிக்க
வைத்த பெருமை முதல்வர் ஸ்டாலினை சேரும்' என, ராஜா பேசுகிறார். கர்நாடகாவில்
பா.ஜ., அரசு இருந்த வரையில் தமிழகத்திற்கு ஒழுங்காக தண்ணீர் வழங்கிக்
கொண்டிருந்த காலம் போய், இப்போது உங்கள் கூட்டணி கட்சியான கர்நாடக
காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் அவப்பெயர்
முதல்வர் ஸ்டாலினையே சேரும்.
ராஜா, ஆர்.எஸ்.பாரதி போன்ற, 'ஏழரை'யை
கூட்டும் ஏடாகூட பேச்சாளர்களால், முதல்வர் ஸ்டாலின் தினமும் எத்தனை முறை
தண்ணீர் குடிக்கிறார் என்பது, ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதை கலாசாரம் மூலை, முடுக்கெல்லாம் பரவி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவது தமிழகத்திற்கு பெரும் கேடாக அமைந்துள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்களை தடுப்பதில்லை. தி.மு.க.,விற்கு எதிராக பேசுவோரை ஹிட்லர் பாணியில் அதிரடியாக கைது செய்கின்றனர்.
தனக்கு எதிராக பேசுவோர் மீது கஞ்சா வழக்கு போடும் பாணியை, இவரது அரசியல் ஆசான் ஜெயலலிதா தானே முதன்முதலில் அறிமுகம் செய்தார்!
துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: இரண்டாவது முறையாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி. நுாறு நாள் வேலை திட்ட பணிகள் சரியாக வழங்கவில்லை என, பெண்கள் கூறுகின்றனர்; அதற்கு காரணம் பா.ஜ., அரசு தான்.
அந்த திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்குவதில்லை.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் இந்த காரணத்தைத் சொல்லி தானே இவங்க வண்டியை ஓட்டணும்!
தி.மு.க., மாணவரணி மாநில தலைவர் ராஜிவ்காந்தி அறிக்கை: சீமான் அரசியல் மாற்று அரசியலும் அல்ல; மாற்றத்திற்கானதும் அல்ல. அதற்கு மாறாக குடி பெருமை பேசி, ஜாதி வெறியை துாண்டி, ஜாதி வெறியர்களை கொம்பு சீவி வளர்க்கும் இழிவான ஜாதிய அரசியல் தான். 100 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கங்கள் சீர்படுத்திய சமூக பாதையில் மீண்டும் ஜாதி குப்பையைஅள்ளி வீசுகிறார். அவர் வழியில் விசிலடிச்சான் கும்பலும், ஜாதி வெறியை துாண்டி வருகிறது.
அரசியலுக்காக ஜாதி கட்சிகளை வளர்த்து விட்டதே திராவிட கட்சிகள் தானே!