PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: நடிகர் ஜோசப்
விஜய், போன வார கூட்டத்தில் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்; இந்த
வாரம் இல்லை. போன வாரம் ஆன்மிக அரசியல்; இந்த வாரம் திராவிட அரசியல். போன
வாரம் போதைக்கு எதிர்ப்பு; இந்த வாரம் நீட் எதிர்ப்பு. போன வாரம் தி.மு.க.,
எதிர்ப்பு; இந்த வாரம் பா.ஜ., எதிர்ப்பு. போன வாரம் நடிகர் விஜய், இந்த
வாரம் ஜோசப் விஜய். ஒரு வாரத்தில், ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில்
முரண்பாடுகளை பார்த்தால், வெகு விரைவில் த.வெ.க., மூடு விழா காணும் என
தோன்றுகிறது.
விஜய் நடுநிலையா இருக்காரு அல்லது பாரபட்சமின்றி மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கிறார்னும் எடுத்துக்கலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேற வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆலோசனை வழங்கினார். அ.தி.மு.க., வெளியேறி விட்டது. ஆனால், சமூக நீதி பேசும் திருமாவளவன், வேங்கைவயல், நாங்குநேரி, நாய்க்கன் ஏரி சம்பவங்களில், சமூக நீதியை நிலைநாட்ட தவறிய தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவது எப்போது?
நீங்க இப்படி எல்லாம் சொன்னால், திருமாவளவன் ரோஷப்பட்டு தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகிடுவாரா என்ன?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ., வின்சென்ட் மீது, கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு தாக்குதல் நடத்தியது. அதை எதிர்த்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷன் மிக கடுமையாக இடதுசாரிகளை சாடினார். 'குற்றவாளி கும்பல், ரவுடிகளின் கூடாரம்' என்றார். ஆனால், ஊருக்கு வெளியே ஒன்று சேர்ந்து பா.ஜ.,வை எதிர்க்கின்றனராம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சின்னு சொல்ற மாதிரி, மாநிலத்தில் அடிச்சுக்குவாங்க; மத்தியில் கூடிக்குவாங்க போல!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ராசிபுரத்தில் ஓடும் பஸ்சில் இருந்து ஒரு பெண் சாலையில் விழும் காட்சியை பார்க்க நேர்ந்தது. இதை தடுப்பதற்கு ஒரே தீர்வு, தானியங்கி கதவுகள் மட்டுமே. தானியங்கி கதவுகள் இல்லாத பஸ்கள் இனி அனுமதிக்கப்படாது என்ற உத்தரவை, தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.
புது பஸ்களை வாங்க மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கலைன்னு சொல்றாங்களே... அதை விடுவிக்க சொல்லலாமே!