PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி: தற்போது
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 எம்.பி.,க்களால் தமிழகத்திற்கு எந்த பலனும்
கிடைக்காது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எம்.பி.,க்கள் தேர்வு
செய்யப்பட்டிருந்தால், அவர்களால் பல முன்னெடுப்புகள் நடந்திருக்கும்.
அப்ப எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொகுதிக்கு மத்திய அரசு எதுவும் செய்யாதுன்னு சொல்ல வர்றீங்களா?
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: செங்கோல் மற்றும் அதை ஏந்தி ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் குறித்து, மதுரை கம்யூ., - எம்.பி., கேவலமாக பேசிய போது, தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்கைதட்டி ரசிக்கிறார் தி.மு.க., வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் ஹிந்து விரோத கட்சிகள் மட்டுமல்ல; தமிழ், தமிழர் விரோத கட்சிகள் ஆகிப் போனதை தமிழர்கள் உணர வேண்டும்.
அதை எல்லாம் தமிழர்கள் உணர துவங்கிட்டா, இவங்களால தேர்தல் களத்துல ஜெயிக்க முடியுமா?
மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: புதிய மூன்று சட்டங்களில், பல்வேறு மொழிகள் பேசும் மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சி தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். இந்த மூன்று சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை திரும்ப பெற வேண்டும். பார்லிமென்டில் இச்சட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்.
அப்படியே விவாதம் நடத்திட் டாலும், இவங்களோட ரெண்டு எம்.பி.,க்களும் அரசுக்கு ஆக்கப் பூர்வாமான ஆலோசனைகளை சொல்லிடுவாங்களா என்ன!
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: 'தர்மத்தை நிலைநாட்டும் செங்கோலை தங்கள் அதிகார சின்னமாக கொண்டு ஆண்டனர், நம் தமிழ் மன்னர்கள். பார் போற்றும் செங்கோலை கொண்ட நம் மன்னர்கள், அந்தப்புரத்தில் பெண் அடிமைத்தனத்தை கோலோச்சினர்' என, ஒட்டுமொத்த தமிழ் கலாசாரத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்துள்ளார் மதுரை எம்.பி., வெங்கடேசன். தமிழ் மன்னர்களின் பெருமைகளையும், தமிழ் பெண்களின் மானத்தையும் ஒரு சேர கழுவில் ஏற்றி, காவு கொடுக்க முயற்சி செய்யும் உங்கள் தமிழ்ப் பற்று புல்லரிக்க வைக்கிறது.
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த எம்.பி.,யை தொகுதி மக்கள் மெச்சிக்குவாங்க!