PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்: ஆந்திர பிரதேசத்தை
தலைமையேற்று நடத்த, சட்டசபை தேர்தலில் தீர்க்கமான வெற்றியை பெற்ற
சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்த்துகள்.
தொலைநோக்கு பார்வை கொண்ட உங்கள் தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும்
முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்.
உள்ளூரில் ஜெயித்த
தி.மு.க.,வுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து சொல்லாம, பக்கத்து ஊருல
ஜெயிச்சவருக்கு விழுந்தடிச்சுட்டு வாழ்த்து சொல்றாரே!
தமிழக அரசின் பாடநுால் வாரிய முன்னாள் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை: லோக்சபா தேர்தலில் பன்னீர் செல்வம், தினகரன் இருவரும் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, தங்கள் முகத்தில் கரியை பூசிக்கொண்டனர். அ.தி.மு.க.,வுக்கும் பூஜ்ஜியம் கிடைத்துள்ளதால், அக்கட்சியில் கலகக்குரல் ஒலிக்குமானால், பழனிசாமி கட்சியை காப்பாற்றுவாரா? அண்ணா மலையும், தன் அதிரடி ஆட்டத்தால், பா.ஜ., கட்சியை, நாம் தமிழர் கட்சிக்கு இணையாக இறக்கி விட்டு விட்டார். ஆனால், தி.மு.க., 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார்.
இவர் சொல்ற மாதிரி அ.தி.மு.க., வில் நடந்த கலகமும், பா.ஜ.,வின் அதிரடியும் தான் தி.மு.க., 40 தொகுதிகளிலும் ஜெயிக்க காரணம் என்பதை மறுப்பதற்கில்லை!
அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்பு உரிமை குழு நிர்வாகி புகழேந்தி பேட்டி: அனைத்து மதத்தினருக்கும், ஜாதியினருக்குமான தலைவராக ஜெயலலிதா இருந்தார். அவரை ஹிந்துத்துவா தலைவர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை பா.ஜ.,வில் ஹிந்துத்துவா தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது.
அதற்கு தான், லோக்சபா தேர்தல் முடிவுகள் வாயிலாக, தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துட்டாங்களே!
அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் துணைச் செயலர், கே.சீனிராஜ் பேச்சு: லோக்சபா தேர்தல் முடிவுகள், கோடிக்கணக்கான தொண்டர்களை சோர்வடைய செய்யவில்லை. மாறாக, வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைத்து, தமிழக மக்கள் துணையுடன் ஆட்சி அமைக்க, உத்வேகத்துடன் பாடுபடுவோம். அந்த வெற்றியை எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் காணிக்கையாக்குவோம்.
தோழமை கட்சிகளை அரவணைத்து, அடுத்தடுத்த தேர்தல் களுக்கு எப்படி கூட்டணியை கட்டி காப்பாற்றுவது என்பதை தி.மு.க.,விடம் தான் இவங்க கத்துக்கணும்!