PUBLISHED ON : ஜூலை 05, 2024 12:00 AM

சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர் சந்திரா பேசுகையில், 'கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவம் தெரிந்தவுடன், 'ஆன் த ஸ்பாட்'டிற்கு அமைச்சர் உதயநிதியை, முதல்வர் அனுப்பி வைத்தார். அவருடன், அமைச்சர்கள் நேரு, வேலு வந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவியும் அரசு செய்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அவ்வாறு உதவி செய்யவில்லை' என்றார்.
இதைக் கேட்ட நகராட்சி அதிகாரி ஒருவர், 'இதை எல்லாம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் பேசலாம்... தெருத் தெருவா மக்கள் பிரச்னைகள் ஆயிரம் இருக்க, இந்த பேச்செல்லாம் இங்க எதுக்கு...' என, முணுமுணுக்க, சக அதிகாரி ஒருவர், 'இதெல்லாம் நம்ம தலையெழுத்து...' என, புலம்பியவாறு நடையை கட்டினார்.