PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை, திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எம்.பி., சுப்பராயன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'விருப்பங்கள் எப்போதும் வாழ்க்கையாகி விடாது. நல்ல விருப்பம் கூட நிறைவேற சூழ்நிலை அமைய வேண்டும். இல்லாத பட்சத்தில் கனவாக போய் விடுகிறது.
'ஜனநாயக அமைப்பில், வெற்றி பெறும் வரை கட்சி பிரதிநிதியாக இருந்தாலும், வெற்றி பெற்ற பின், அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். எதிராக வாக்களித்தவர்களும், என்னிடம் கோரிக்கை வைக்க உரிமை பெற்றவர்கள். அவர்களுக்காகவும் நான் பணியாற்ற கடமைப்பட்டவன்' என்றார்.
இதை கேட்ட சங்க நிர்வாகிகளில் ஒருவர், 'கருத்தெல்லாம் பலமா தான் இருக்குது... ஆனால், இது யாருக்கு பொருந்துதோ, இல்லையோ, இவங்க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு நல்லாவே பொருந்தும்...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.