PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM

ஈரோடு மாவட்டம், கோபி அருகே முருகன்புதுார் நகரவை மகளிர் மேல்நிலை பள்ளியில், கூடுதல் கழிப்பறை கட்டும் பணிக்கு நடந்த பூமி பூஜையில், திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பங்கேற்றார்.
நிகழ்ச்சி துவங்கியதும், தி.மு.க.,வை சேர்ந்த கோபி நகராட்சி தலைவர் நாகராஜை அழைத்த சுப்பராயன், 'நான் இங்கேயே இருக்கிறேன்... நீங்களே பூஜை போடுங்கள்...' என்று தயங்கியபடி கூறினார். இதைக் கேட்ட நாகராஜ், 'அட நீங்களும் வாங்க...' என, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, சுப்பராயனை பூஜையில் பங்கேற்க செய்தார்.
இதைப் பார்த்த நகராட்சி அதிகாரி ஒருவர், 'தொடர்ந்து ரெண்டாவது முறையா சுப்பராயன் ஜெயிச்சிருக்கார்... இன்னும் எவ்வளவோ இருக்கு... இவர் பூஜை போட வர்றதுக்கே இவ்வளவு யோசிக்கிறாரே... ஆரம்பமே சரியில்லையே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்த மற்ற அதிகாரிகள் கமுக்கமாக சிரித்தனர்.