PUBLISHED ON : மே 23, 2025 12:00 AM

மே 23, 1973
புதுச்சேரி மாநிலம், வில்லியனுாரில்,சுப்பராயர் - பாலாம்பாள் தம்பதியின் மகனாக, 1916, செப்டம்பர் 15ல் பிறந்தவர் அப்பாவு. கம்பன் மீதான பற்றால், பின்னாளில் தன் பெயரை கம்பதாசன் என மாற்றிக் கொண்டார்.
சென்னை புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு வரையே படித்தார். பின், நாடகங்களில் பாடி நடிக்கத் துவங்கினார். நாடகங்களுக்கு பாடல்களும் எழுதினார்.
வாமன அவதாரம் படத்திற்காக, சி.எஸ்.ராஜப்பா என்ற புனை பெயரில் பாடல் எழுதினார். தொடர்ந்து, வேணுகானம், மகாமாயா, பூம்பாவை, மங்கையர்க்கரசி உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
புராண படங்கள் எடுக்கப்பட்ட காலத்திலும், தன் பாடல்களில் சமூக கருத்துகளை நுழைத்தார். ஹிந்தி படங்களை தமிழாக்கம் செய்யும் குழுவிலும் பணியாற்றினார்.
'கனவு, விதியின் விழிப்பு, புதுக்குரல்' உட்பட பல நுால்களை எழுதினார். தமிழக அரசின், 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1973ம் ஆண்டு இதே நாளில், தன் 57வது வயதில் காலமானார்.
இவரது நினைவு தினம் இன்று!