PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

ஜூலை 24, 2017
கர்நாடக மாநிலம், உடுப்பியில், அடமாறு என்ற கிராமத்தில், லட்சுமிநாராயண ஆச்சார்யா -- கிருஷ்ணவேணியம்மா தம்பதியின் மகனாக, 1932, மார்ச் 10ல் பிறந்தவர் ராமச்சந்திர ராவ்.
இவர், உடுப்பி கிறிஸ்துவ பள்ளி, அனந்தபூர் அரசு கல்லுாரி, பனாரஸ் ஹிந்து பல்கலைகளில் படித்தார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலால், குஜராத் பல்கலையில் இயற்பியலில் பிஎச்.டி., முடித்தார். ஆமதாபாத் இயற்பியல் ஆய்வகத்தின் நிர்வாக குழு தலைவர், திருவனந்தபுரம் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப கழக தலைவர், எம்.ஐ.டி.,யின் ஆசிரிய உறுப்பினர், டெக்சாஸ் பல்கலை உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளை செய்தார்.
'ஆர்யபட்டா' உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, ஏ.எஸ்.எல்.வி., -- பி.எஸ்.எல்.வி., -மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை ஏவினார். 'பத்ம பூஷன், பத்ம விபூஷன்' விருதுகளை பெற்ற இவர், 2017ல் தன் 85வது வயதில் இதே நாளில் மறைந்தார். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மதிப்புக்குரிய, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மறைந்த தினம் இன்று!