PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM

ஜூலை 23, 1976
இசையமைப்பாளர் இளைய ராஜா - ஜீவா தம்பதியின் மகளாக, சென்னையில், 1976ல் இதே நாளில் பிறந்தவர் பவதாரிணி. இவர், சென்னை ரோசரி மெட்ரிக், ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளில் படித்தார். இவரது தந்தை இசையமைத்த, மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமாகி, 'தித்தித்தேய் தாளம்' என்ற பாடலை பாடினார்.
தொடர்ந்து, அஞ்சலி படத்தில், 'சம்திங் சம்திங், அஞ்சலி அஞ்சலி, மொட்ட மாடி' ஆகிய பாடல்களை பாடினார். ராசய்யா படத்தின், 'மஸ்தானா மஸ்தானா' என்ற பாடலில் பிரபலமானார்.
இவர் பாடிய, 'என் வீட்டு ஜன்னல் எட்டி, என்னை தாலாட்ட வருவாளோ, ஓ பேபி பேபி, பூங்காற்றே, ஒளியிலே தெரிவது, காற்றில் வரும் கீதம்' உள்ளிட்ட பாடல்கள் மீண்டும் மீண்டும் மனதில் ரீங்காரமிடும். தனித்துவமான குரலால், தன் தந்தை மற்றும் சகோதரர்களின் இசையில் அதிக பாடல்களை பாடினார்.
பாரதி படத்தின், 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், தன் 47வது வயதில், 2024 ஜனவரி 25ல் இலங்கையில் காலமானார். 'இசைஞானியின் இளவரசி' பிறந்த தினம் இன்று!