PUBLISHED ON : ஜூலை 15, 2024 12:00 AM

ஜூலை 15, 1876
நாகப்பட்டினத்தில், அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிய சொக்கநாத பிள்ளை - சின்னம்மையார் தம்பதியின் மகனாக, 1876ல் இதே நாளில் பிறந்தவர் மறைமலையடிகள் எனும் வேதாசலம்.
இவர், நாகை உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, தந்தை மறைந்தார். அங்கு புத்தகக் கடை வைத்திருந்த நாராயணசாமி பிள்ளையிடம் தமிழையும், சூளை சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தத்தையும் கற்றார்.
'சைவ சித்தாந்த தீபிகை' எனும் இதழில் பணியாற்றினார். 'அறிவுக்கடல்' என்ற இதழை துவக்கி, அதன் ஆசிரியரானார். 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' என்ற அமைப்பை துவக்கி மாநாடுகளை நடத்தினார். வள்ளலாரின் கொள்கைப்படி, சென்னை பல்லாவரத்தில், 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' துவக்கி, பல நுால்களை அச்சிட்டார்.
தனித் தமிழ் ஆர்வத்தால், தன் பெயரை, 'மறைமலையடிகள்' என மாற்றிக் கொண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். 'சாகுந்தல நாடக ஆராய்ச்சி, முல்லை பாட்டு ஆராய்ச்சி, சிவஞான போத ஆராய்ச்சி' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதினார்.
மேலும், 1,000த்துக்கும் மேற்பட்ட நுால்களை சேமித்து நுாலகத்தை அமைத்தார். இவர், தன் 74வது வயதில், 1950 செப்டம்பர் 15ல் மறைந்தார்.
'தனித் தமிழ் இயக்க தந்தை' பிறந்த தினம் இன்று!