PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

ஜூலை 10, 1942
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில், டாக்டர் கோட்டா சீதாராம ஆஞ்சநேயலுவின் மகனாக, 1942ல் இதே நாளில் பிறந்தவர் கோட்டா சீனிவாச ராவ். படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்த இவர், ப்ரணாம் கரீடு என்ற தெலுங்கு படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி சினிமாக்களில் குணச்சித்திரம், வில்லன் வேடங்களை ஏற்று நடித்த இவர், 2003ல் தமிழில் வெளியான, சாமி திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து, குத்து, கோ, திருப்பாச்சி, சகுனி, ரத்த சரித்திரம், கனகவேல் காக்க, சாது மிரண்டா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் ஆந்திர அரசின், 'நந்தி' விருதை ஒன்பது முறை பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ'யையும் பெற்றுள்ளார். பா.ஜ., சார்பில், விஜயவாடா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் இருந்தார். இவர் தெலுங்கில் பாடிய பாடல்கள் இசைத்தட்டுகளில் பிரபலமாக உள்ளன. இவரது, 82வது பிறந்த தினம் இன்று!