PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

ஜூலை 9, 1966
கேரள மாநிலம், பாலக்காட்டில், ராதாகிருஷ்ணன் - ஹரிணி தம்பதியின் மகனாக, 1966ல் இதே நாளில் பிறந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் தன், 12 வயது முதல் வி.எல்.சேஷாத்ரியிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். சென்னை விவேகானந்தா கல்லுாரி, சென்னை பல்கலைகளில் படித்தார்.
சாக்லேட் நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு, பின்னணி பாடகராகமுயற்சித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், காதலன் படத்தில், 'என்னவளே அடி என்னவளே...' என்ற பாடலை பாடி பின்னணி பாடகராகி, அந்த பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடினார்.
'உயிரும் நீயே, தென்மேற்கு பருவக்காற்று, காலமெல்லாம் காதல் வாழ்க, காதல் நீதானா, பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன், உன் சமையல் அறையில்' உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான பாடல்களை பாடி, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கர்நாடக இசை மேடைகளை ராகங்களால் அலங்கரிப்பவர். சைவம் படத்தின், 'அழகு...' பாடலுக்காக, தேசிய விருது பெற்ற உத்தாராவின் தந்தையான இவர், 'கலைமாமணி, சங்கீத சக்கரவர்த்தி' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவரது 58வது பிறந்த தினம் இன்று!