Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ காலத்தின் கொடுமை!

காலத்தின் கொடுமை!

காலத்தின் கொடுமை!

காலத்தின் கொடுமை!

PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.எஸ்.அய்யாசாமி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஒரு சர்ச், மசூதியில் ஜெபக்கூட்டம் மற்றும் தொழுகை நடைபெறாமல் மூடுப்பட்டுள்ளதை பார்க்க முடியாது.

ஒருவேளை அப்படியொரு இக்கட்டான நிலை சர்சுக்கோ, மசூதிக்கோ வந்தால், உடனே அரசு கருவூலத்தில் இருந்தோ அல்லது கோவில் உண்டியல் காணிக்கையை சூறையாடியோ, அவற்றிற்கு கொடுத்து, 'புனர்வாழ்வு' அளித்திருக்கும், தி.மு.க., அரசு.

ஆனால், கோவில்கள் கவனிப்பார் இன்றி பழுதடைந்து கிடந்தாலும், அதை கண்டுகொள்ளாது. அதேநேரம், 1,000 கும்பாபிஷேகங்கள் நடத்தினோம், 5,000 கோவில்களை புதுப்பித்தோம் என்று கதை கட்டுவர்.

எத்தனையோ கோவில்கள் ஒருவேளை பூஜை கூட இல்லாமல் மூடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலங்கியம் கிராமத்தில் உள்ள தண்டீஸ்வரர் மற்றும் வீரராகவ விநாயகர் கோவில். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் நிலங்கள் ஏலம் விடப்பட்டு, வருவாய் கிடைத்தும், இக்கோவிலில் ஒருவேளை பூஜை கூட நடத்தாமல் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாராபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், கோவிலை முறையாக திறந்து வைத்து, ஒருவேளை பூஜையாவது நடத்த உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை வைக்கும் வகையில், கோவில் திறந்து இருக்க வேண்டும்; தினமும் ஒருவேளை பூஜையாவது நடத்தப்பட வேண்டும்' என்று, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்கு நிலங்கள் வழங்கப்படுவதே, தடையின்றி பூஜை நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான்... ஆனால், இங்கு என்ன நடக்கிறது?

ஏலத்துக்கு விடப்படும் கோவில் நிலங்கள், நகைகள், உண்டியல் பணம் என அனைத்தையும் அறநிலையத்துறை என்ற பெயரில் கையகப்படுத்தும் அரசு, அக்கோவில்களில் முறையாக பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதில்லை.

கோவில்களை திறப்பதற்கே இங்கு நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பது காலத்தின் கொடுமை!



எல்லாருக்கும் நிதி கிடைக்குமா?


கே.ரங்கராஜன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர், 68 பேருக்கும் இழப்பீட்டு தொகையாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தற்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, 85 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், தமிழக அரசும் தலா, 25 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது.

கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல், எவர்களோ செய்த தவறுக்கு மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்கிறது!

அப்பெண்களுக்கு நடந்துள்ளது, மிகப் பெரிய கொடுமை தான்; இதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கிவிட்ட நிலையில், தமிழக அரசு எதற்காக, 25 லட்சம் ரூபாய் தர வேண்டும்?

இதுபோன்று தானே அண்ணாபல்கலை மாணவி பாதிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு என்ன நீதி வழங்கி உள்ளது?

குற்றவாளியை கைது செய்யவே எதிர்க்கட்சிகள் போராட வேண்டி இருந்ததே... இன்றளவும், 'யார் அந்த சார்?' விடை காண முடியாத வினாவாகத் தானே இருக்கிறது!

அத்துடன், தமிழகத்தில் தினமும் பல பாலியல் குற்றங்கள் அரங்கேறுகின்றன. பாதிக்கப்படும் அனைத்து பெண்களுக்கும் 25 லட்சம் ரூபாய் அரசு வழங்குமா?

கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, கலவி பாடம் கற்பித்து, பிஞ்சுகளின் வாழ்க்கையை நாசம் செய்தனரே...

பாதிக்கப்பட்ட சிறுமியர் எத்தனை பேருக்கு திராவிட மாடல் அரசு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கியுள்ளது?

எதற்கு இந்த தாராள நாடகம்?

காமுகர்கள் சிலர் தவறு செய்ய, அதற்கு மக்களின் வரிப்பணம் தான் விரயம் செய்யப்பட வேண்டுமா...

குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கியிருக்க வேண்டுமே தவிர, இப்படி மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கக் கூடாது!



இதற்கு பணம் இருக்கிறதா?


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விழுப்புரம் பகுதியில் பெய்த கோடை மழையால், நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்துள்ளன. அதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 60,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளன. இதனால், 240 டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது' என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்களின் அலட்சிய மனோபாவமும், நிர்வாக திறமை இன்மையுமே காரணம்!

அதிக மழை பெய்தாலும், காலந்தவறி பெய்தாலும், மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுவது விவசாயம் தான்!

இத்தகைய சூழ்நிலையிலும், விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த நெல்மணிகள், அரசின் பொறுப்பற்ற தன்மையால் வீணாகின்றன.

வெயிலிலும், மழையிலும், சேற்றிலும் உழைத்து, அதை உருவாக்கியவர்களுக்கு தான், வீணாவதன் வலி தெரியும். அதை, 'ஏசி' அறையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் ஆட்சியாளர்கள் எப்படி அறிவர்?

'குடி'மகன்களுக்கு தங்குதடையின்றி மது கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநிலம் முழுதும், ஆங்காங்கே மிகுந்த பாதுகாப்புடன் குடோன் அமைத்து, மதுவை சேமித்து வைக்க அரசிடம் பணம் இருக்கிறது... அதேநேரம், உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க பணம் இல்லையாம்!

உயிர்வாழத் தேவை யான நெல்மணிகளை வீணாக்கிவிட்டு, தீங்கு விளைவிக்கும் மதுபானங்களை மிகுந்த பாதுகாப்புடன் சேமித்து வைப்பதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியோ?

ஓட்டு வாங்க மட்டுமே உதவக்கூடிய, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மாதம், 1,200 கோடி ரூபாய் செலவிடும் தமிழக அரசு, அதில் பாதியை நெல் சேமிப்பு கிடங்குகளை அமைக்க பயன்படுத்தி இருக்கலாமே!

இலவச திட்டங்களுக்கு கொடுக்கும் அக்கறையை, நீர் மேலாண்மை, விவசாயத்திற்கு கொடுத்திருந்தால், கடன் வாங்குவதில் இன்று, தமிழகம் முதல் மாநிலமாக வந்திருக்காது!

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மறந்து விட வேண்டாம்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us