PUBLISHED ON : மே 23, 2025 12:00 AM

-ஆர்.சக்திவேல், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கிண்டி, சர்தார் படேல் சாலை மற்றும் கன்னியாகுமரியில் மஹாத்மா காந்திக்கு மண்டபம் கட்டியதை தவிர, வேறு எங்கும் எதையும் கட்டியதில்லை.
அதையும் கூட, 'காந்தி மண்டபம்' என்று தான் அழைத்தனரே தவிர, காந்தி மணிமண்டபம் என்று அழைக்கவில்லை.
சிலைகளும் அதுபோலத்தான்!
ஆனால், திராவிட கழகம் ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, சிலைகள் வைப்பதும், மணிமண்டபங்கள் அமைப்பதுமாய், அன்றிலிருந்து இன்றுவரை ஒரே அமர்க்களம் தான்.
இந்நிலையில், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு மண்டபம் அமைக்க, கோடநாடு எஸ்டேட்டில் பூஜை போடப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்படி அரசுக்கு மனு அளித்தும் இதுவரை ஒப்புதல் தரவில்லை' என்று கொளுத்தி போட்டுள்ளார், ஜெயலலிதாவின் தோழி சசிகலா.
அதுசரி...இம்மணிமண்டபங்களால், மக்களுக்கு என்ன பயன்?
அரசுக்கு செலவு வைக்கும் இவை ஆங்காங்கே காட்சி பொருளாக இருக்கின்றனவே அன்றி, அவற்றினால், மக்கள் எந்த வகையில் பயனடைகின்றனர்?
அடையாறு ஆந்திர மஹிள சபாவுக்கு பக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கும், பசுமை வழிச்சாலையில் அம்பேத்கருக்கும் அரசு செலவில் மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
காந்தி மண்டபத்திற்கும், அருகிலுள்ள பாம்புப் பண்ணை மற்றும் சிறுவர் பூங்காவுக்கும் காதலர்களும், சுற்றுலா பயணியருமாவது வருகின்றனர். ஆனால், இம்மண்டபங்களோ ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதில், கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கப் போகிறாராம் சசிகலா...
அக்காலத்தில், செல்வந்தர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பள்ளிக் கூடங்களையும், நுாலகங்களையும் அமைத்தனர்.
இன்று, வீண் பெருமைக்காக மணிமண்டம் கட்டும் புது கலாசாரம் தொற்றிக் கொண்டுள்ளது!
அரசியல்வாதிகளும் அந்தந்த ஜாதி தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக கூறி, ஓட்டு அறுவடை செய்கின்றனர்.
இப்படி மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்வதற்கு பதில், அந்த தலைவர்களின் பெயரில் நுாலகங்கள் அமைக்கலாமே!
எது பொருள் நிறைந்த மாநாடு?
எஸ்.கண்ணம்மா,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சில கட்சிகள்,
அரசியலுக்காக மாநாடுகளை நடத்துகின்றனர். இன்னும் சிலர் முழு நிலவு மாநாட்டை
நடத்தி, அதில் எவ்வித பொருளும் இல்லாமல் முடித்துள்ளனர். ஆனால், வி.சி.,
கட்சி பல்வேறு தலைப்புகளில், பல ஆயிரம் பொருள்பட பேசக்கூடிய மாநாடுகளை
நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் மற்றும் வக்ப்
திருத்த சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறது' என்று, வி.சி.,
தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சிறுபான்மை ஓட்டுக்காக திருமா
நடத்தும் நாடகம் தான், இந்த மாநாடு என்பதை படிக்காத பாமரர் கூட அறிவர்.
இதில் என்ன பொருள் நிறைந்த மாநாடு?
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இஸ்லாமியருக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்து விட்டது?
இஸ்லாமியர்
என்ற போர்வையில் நாடு முழுதும் பரவியுள்ள பாகிஸ்தான், வங்தேசத்தினரை
வெளியேற்றி விட்டால், இண்டியா கூட்டணியின் ஓட்டுக்கு வேட்டு விழுந்து
விடும் என்பதால் இச்சட்டத்தை எதிர்க்கிறார் போலும்!
அதேபோன்று, 'முத்தலாக்' தடை சட்டம்!
இஸ்லாமிய பெண்களே இச்சட்டத்தை வரவேற்கும் போது, திருமண வாழ்வின் கஷ்டம், நஷடம் தெரியாத திருமா எதற்கு அதை எதிர்க்க வேண்டும்?
இச்சட்டத்தால்
எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? கணவரால் கைவிடப்பட்டு பெற்றோர்
வீட்டில் கண்ணீருடன் காலம் கழிப்போர் எவ்வளவு பேர் என்று திருமா சொல்ல
முடியுமா?
வக்ப் சட்ட திருத்தத்தை எதிர்த்து, வி.சி., கட்சியினர் போராடி வருகின்றனராம்...
ஹிந்து
கோவில் சொத்துக்களை தமிழக அரசு, அறநிலையத் துறை என்ற பெயரில்
கையகப்படுத்தி வைத்திருப்பதைப் போல், மத்திய அரசு, வக்ப் சொத்தை
கையகப்படுத்தியுள்ளதா என்ன...
அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே
வக்ப் சொத்துக்களை அனுபவித்து வந்த நிலையில், ஏழை இஸ்லாமியருக்கும் அது
பயன்படும் வகையில், திருத்தம் கொண்டு வந்தால், அதற்காக வி.சி., போராடுமாம்!
எவர்களுடைய
நலனை காக்கப் போவதாக திருமாவளவன் கட்சி ஆரம்பித்தாரோ அம்மக்களின்
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டபோது, அதற்காக ஒரு போராட்டம் இல்லை;
கள்ளக் குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் அம்மக்கள் மரணம் அடைந்தபோது,
அவர்களுக்காக உரத்த குரல் எழுப்பவில்லை.
இவர் தான் சிறுபான்மையினர் நலன் காக்க, பொருள் பொதித்த மாநாட்டை நடத்துகிறாராம்... அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கிறாராம்!
வேடிக்கை தான்!
வரும்முன் காப்பது அவசியம்!
பி.சுருதி
ஷிவானி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில
நாட்களுக்கு முன், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே, சாலையோர
கிணற்றில் கார் மோதி கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பொதுவாகவே,
அதிகாரிகள் தங்கள் துறை தொடர்பான விஷயங்களை அவ்வப்போது ஆய்வு செய்து
நடவடிக்கை எடுப்பது இல்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு
ஏற்பட்ட பின் தான் நடவடிக்கை எடுக்கின்றனர் அல்லது நடவடிக்கை எடுப்பது
போல் நடிக்கின்றனர்.
உதாரணமாக, பட்டாசு ஆலையில் வெடி விபத்து
நடந்து, உயிரிழப்புகள் ஏற்பட்ட பின், கண் துடைப்பிற்கு ஆய்வு செய்து
நடவடிக்கை எடுப்பதும், லைசென்ஸ் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று காரணம்
கூறி, பின், அதை மறந்தும் போகின்றனர்.
அதைப்போன்று, சாலை யோரத்தில்
உள்ள ஆபத்தான கிணறுகள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் செய்திகள்
வந்தாலும், அதிகாரிகள் அதை கண்டுகொள்வதில்லை.
விளைவு... சாலையோர
கிணற்றில் கார் மோதி கவிழந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர்
உயிரிழந்துள்ளனர். இப்போது, 'தமிழகம் முழுதும் உள்ள சாலையோர கிணறுகளை
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கலெக்டர்கள் மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
இந்த ஆய்வும் வழக்கம்போல் கண் துடைப்பிற்காக
நடத்தப்படாமல், இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்ற
எண்ணத்துடன் நடத்தப்படுவதுடன், உடனடியாக சாலையோர கிணறுகள் மற்றும்
நீர்நிலைகளை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.
வரும்முன் காப்பதற்கு தான் அரசு உள்ளது; வந்தபின் அறிக்கை விட அல்ல என்பதை ஆளுவோரும் உணர வேண்டும்!