PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

எஸ்.உதயம் ராம், சென்னையிலிருந்து
அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சித்தம்
கலங்கி விட்டது போல தெரிகிறது. இல்லையென்றால் வேலை வாய்ப்பில் எல்லா
இடங்களும் கன்னடர்களுக்கே என்று அறிவிப்பாரா? அதிலும், தனியார்
நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று
அறிவித்து, தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு காட்டியவுடன், 'பல்டி'யடித்து
பின் வாங்கியிருப்பாரா?
அரசுத் துறைகளில், ஜாதி அடிப்படையில்
இடஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, மொழி வாரியாக இட ஒதுக்கீடு
இருப்பது போதாது என்று, கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தனியாரின்
நிர்வாகத்திலும் அரசு மூக்கை நுழைத்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பது
அபத்தமானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட.
'எங்களுக்குத்
திறமையாளர்களே முக்கியம்' என, தொழில் நிறுவனங்கள் உரத்த குரல் கொடுத்ததால்,
அந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு
மாநிலமும் அந்தந்த மாநிலத்தவர்க்கே அந்தந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு
என்று தீர்மானிக்குமானால், அந்தந்த மாநிலத்தில் உள்ள அத்தனை பேருக்கும்
வேலை வாய்ப்புக் கிடைக்குமா; தருவதற்குத் தான் அரசால் முடியுமா?
அரசு
துறைகளின் கையாலாகாத்தனம், அலட்சியம், தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்
இவற்றால் தான் தனியார் நிறுவனங்களை பொதுமக்கள் நம்புகின்றனர். இது ஆளும்
வர்க்கத்தினருக்குத் தெரிந்துமா தனியார் நிறுவனங்களுக்குள் தலையை
நுழைக்கின்றனர். வெட்கக்கேடான அணுகுமுறை இது. மனிதர்களின் அறிவும்,
திறமையும் ஒரு மாநிலத்துக்குள்ளேயே முடங்குமேயானால், பின் எப்படி
திரைகடலோடி திரவியம் தேடுவது... அன்னிய செலாவணி ஈட்டுவது?
எனவே,
அரசியல் தலைவர்களே... கர்நாடகம் கன்னடத்து மக்களுக்கே; தமிழகம்
தமிழர்களுக்கே போன்ற கோஷங்களை அரசியல் மேடையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்;
அதை கல்வி, வேலைவாய்ப்பு என, இவற்றில் திணிக்காதீர்கள் என்று மன்றாடிக்
கேட்டுக் கொள்கிறேன்.
சாத்தியப்படுத்துங்கள் தமிழகத்தில்!
எஸ்.ரகுராமன், வல்லம் அஞ்சல், செங்கல்பட்டில் இருந்து எழுதுகிறார்: 'தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை' என கலால் மற்றும் ஆயத்தீர்வை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் முத்துசாமி, தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.
கலால் மற்றும் ஆயத்தீர்வை தொடர்பான புதிய சட்டங்கள், தமிழக சட்டசபையில் அறிமுகப்படுத்திய நாளன்று, அமைச்சர் முத்துசாமி, முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை என அறிவிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
கடந்த 2020ல் கனிமொழி, உதயநிதி மற்றும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமாகிய ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் பொது வெளியில் கருப்பு உடை அணிந்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியது, இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்ததே.
ஜூன் 30ல், தமிழக சட்டசபையில் தி.மு.க.,வின் முன்னோடியும், அதன் பொதுச் செயலரும் மூத்த அமைச்சருமாகிய துரைமுருகன், தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் அரசு நிறுவனமான டாஸ்மாக் வாயிலாக விற்பனை செய்யும் பல ரக மதுவகைகளில், போதை இல்லை என கூறியதை தொடர்ந்து, டாஸ்மாக் வாயிலாக விற்பனை செய்யும் மதுவகைகள் தரமற்றது என்பதை முதல்வர் ஏற்றுக் கொள்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
'தமிழகத்தில் மது விலக்கை சாத்தியப்படுத்த, தெருவுக்கு தெரு காவல் நிலையம் அமைக்க முடியுமா?' என, அதே துரைமுருகன் வினா எழுப்பியுள்ளது, தற்போதைய மாநில காவல்துறையினர் மீது, அவருக்கு நம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
மேலும் துரைமுருகன், உழைப்பவர்கள் அசதிக்காக மது அருந்துவதாக கூறியுள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில், கொரோனா தொற்று நிலவிய போது, அப்போது மிகவும் கடினமாகவும், இடைவெளியில்லாமலும் பணியாற்றிய முன்கள பணியாளர்கள், விவசாயிகள், சுமை துாக்குவோர் பார்சல் டெலிவரி செய்யும் களப்பணியாளர்கள் யாரும், மது அருந்தாமல், செவ்வனே பணியாற்றி வந்ததை யாரும் மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ முடியாது.
முன்னாள் தமிழக காவல் துறை தலைமை அதிகாரியாக பணியாற்றிய வைகுந்த், தமிழகத்தில் முழு மது விலக்கு சாத்தியமற்றது என்பது, அவர் தலைமை அதிகாரியாக பொறுப்பு ஏற்று நடத்திய காவல் துறையினர் மீது, அவருக்கே நம்பிக்கையில்லை என்பதையும், காவல்துறையினர் நேர்மையற்றவர்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
பீஹார் மாநிலத்தில், மது விற்பனையை தடை செய்து, பூரண மது விலக்கு அமல்படுத்திய போது, கள்ளச்சாராயத்தால் உயிர் நீத்தவர்களுக்கு இழப்பீடு தர இயலாது என்று முதல்வர் நிதீஷ் குமார் திட்டவட்டமாக அறிவித்தார். தற்போது அந்த மாநிலத்தின் உற்பத்தி திறன் அதிகரித்து முன்னேற்றமடைந்து வரும் மாநிலமாக மாறி வருவதை, அனைவரும் நன்கு அறிவோம்.
தமிழகத்திலும் இதை சாத்தியப்படுத்த வேண்டும்.
சுண்டல், சுரண்டல் ஜனநாயகமா?
குருபங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், ஜனநாயகம் எனும் போர்வையில், பணநாயகம் பேயாட்டம் போடுவது, நாம் பெற்ற சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது!
தமிழகத்தில் நிலை கொண்ட திராவிட மாடல் சுரண்டல் அரசியல், தற்போது தேசமெங்கும் தொற்று நோயாக பரவியுள்ளது, நாட்டை பிடித்த சாபக்கேடாகும்!
ஊழல் அரசியல்வாதிகளின் சித்தாந்தமானது, முதலில் ஓட்டுக்கு பணம், இலவசம் எனும் சுண்டலை கொடுத்து பதவிக்கு வருவது. பிறகு, ஊழல் புரிந்து, இயற்கை கனிம வள சூரை, மக்கள் வரிப்பண சுரண்டல், வரி ஏய்ப்பு என, குறுக்கு வழியில் தங்க சுரங்கத்தை பெறுவது.
இத்தகைய சுண்டல், சுரண்டல், தங்க சுரங்க மோசடி அரசியல் மூலம், கயவர்கள், ஊழல்வாதிகள், முட்டாள்கள், மூடர்கள், சமூக விரோதிகள், ஜாதி, மத, மொழி, இன வெறியர்கள் என சகட்டு மேனிக்கு, முதலமைச்சர், அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ, கவுன்சிலர் என, ஒன்று விடாது பதவிகளை கைப்பற்றி, சுண்டல், சுரண்டல் அரசியல் செய்து, மீண்டும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்கின்றனர்.
இதை தடுக்கும் ஒரே வழி, தேர்தல் கமிஷன், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை முனைந்து, ஊழல், ஜாதி, மத, மொழி, இன அரசியல், ஓட்டுக்கு பணம் மற்றும் அனாவசிய இலவச மக்கள் வரிப்பண விரயங்களுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைப்பது தான்.
இதை செய்வதால் மட்டுமே, நம் நாட்டில், ஜனநாயகம் தழைக்கும்; பெற்ற சுதந்திரம் பிழைக்கும்; சுண்டல், சுரண்டல் அரசியல், இறக்கும்; நல்லோர் அரசியலுக்கு வர, வழி வகுக்கும்!