Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது?

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது?

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது?

இதற்கெல்லாம் விடிவு காலம் எப்போது?

PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ மெயில்' கடிதம்: போதைப் பொருள் கடத்தி, கோடிக்கணக்கில் பணம் பார்த்ததில் கடத்தல் மன்னனாக இதுவரை ஜாபர் சாதிக் மட்டுமே இருந்தார். தற்போது, அவரையும் மிஞ்சும் வகையில் புதிதாக, செய்யது இப்ராஹிம் என்பவர் உருவெடுத்து உள்ளார். இந்த இரண்டு கடத்தல் மன்னர்களும், தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜாபர் சாதிக் போதைப் பொருட்களைக் கடத்தி சம்பாதித்த பணத்தில், அமீர் போன்ற சினிமா இயக்குனர்களுக்கு தாராளமாக பணத்தை வாரி வழங்கியது வெட்ட வெளிச்சமானது. தற்போது, போலீசாரிடம் வசமாக சிக்கிய செய்யது இப்ராஹிம், யார் யாருக்கு எவ்வளவு பணத்தை வாரி வழங்கினாரோ?

கடத்தல் மன்னர்களான இந்த இருவரும் தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புகளில் இருந்ததால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் தோழர்கள் விமர்சனம் செய்யத் தயங்குகின்றனர். பா.ம.க., தலைவர் அன்புமணி, பா.ஜ., தலைவர் அண்ணாமலை மட்டுமே செய்யது இப்ராஹிமை கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

ஜாபர் சாதிக்கை தி.மு.க., கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனே நீக்கியது போல, இப்போது, செய்யது இப்ராஹிமையும் தி.மு.க.,விலிருந்து உடனடியாக நீக்குவதாக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டு, தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டார்.

அருமைத் தமிழகம் இதுவரை கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலமாக மட்டுமே இருந்தது; தற்போது, போதைப் பொருள் தங்கு தடையின்றி கடத்துவதற்கு ஏற்ற மாநிலமாகவும் மாறிவிட்டது.

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியில் சாராயம் மற்றும் போதைப் பொருள் கடத்தல், அரசியல் தலைவர்கள் படுகொலைகள் போன்றவை நடந்ததே இல்லை. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ரவுடிகள் சாம்ராஜ்யம் தழைத்தோங்க ஆரம்பித்தது.

படிக்க வேண்டிய மாணவர்கள், 'குடித்து' கும்மாளம் போட ஆரம்பித்ததும் கழக ஆட்சிகளில் தான். சமூக நீதி கடைப்பிடிக்கப்படும் திராவிட மாடல் ஆட்சியில் தான் கொலைகள், போதைப் பொருள் கடத்தல் வெகு ஜோராக நடக்கின்றன.

'இதற்கெல்லாம் விடிவுகாலம் எப்போது வரும்' என தமிழக மக்கள், வழி மேல் விழி வைத்து, சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.



குஜராத்துக்கு ஒருமுறை வந்து செல்லுங்கள்!


ரமேஷ் வேங்கடராமன், ஆமதாபாத்-, குஜராத் மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்மையில் வெளிவந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவுகளின்படி, சென்னை நகரிலுள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில், தினசரி 25 கோடி லிட்டர் சாக்கடை நீர் கலக்கப்படுகிறது என்று தெரிகிறது.

சென்னையில், ஐந்து இடங்களில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும் நிலையங்கள் இருந்தாலும், அவற்றால் சென்னை நகர மக்கள் வெளியேற்றும் கழிவுநீரின் அளவைச் சமாளிக்கவே முடியவில்லை என்றும், இந்த ஆய்வு கூறுகிறது.

இதனால், மழைக்காலம் முடிந்தபிறகு இவ்விரு ஆறுகளும் சாக்கடைகளாகவே மாறி விடுகின்றன என்கிறது அந்த ஆய்வு.

ஆனால், 'தமிழகம் வளர்ந்த மாநிலம்' என, நிதி அமைச்சர் பெருமிதப்பட்டுக் கொள்கிறார். எந்த வளர்ந்த மாநிலத்திலும் இப்படி ஒரு கேவலமான நிலை இருப்பதில்லை.

உண்மையில், 55 ஆண்டுகளாக தமிழகத்தைத் தங்களுக்கிடையே பங்கு போட்டுக் கொண்ட திராவிடக் கட்சிகள், கூவம் மற்றும் அடையாறின் நிலை குறித்து, வெட்கப்பட வேண்டும்.

ஆனால், ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் நினைத்த போதெல்லாம் சென்றுவரும் இவர்களுக்கும், அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களது வாரிசுகளுக்கும் கூட, அங்குள்ள வசதிகளை, நம் மாநிலத்துக்கு ஏன் தரக்கூடாது என்ற சிந்தனை தோன்றுவதில்லை என்பதுதான் தெரிகிறது.

குஜராத் மீது திராவிட கட்சிகள், வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த குஜராத்தில், மோடி முதல்வராக பதவி ஏற்றபோது, சபர்மதி ஆறு, கிட்டத்தட்ட கூவம் நிலையில் தான் இருந்தது.

சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி, சபர்மதியை மோடி சுத்தம் செய்துவிட்டதால் தற்போது, சபர்மதியின் கரைகள், லண்டனின் தேம்ஸ் நதிக்கரை போலவும், பாரீசின் செய்ன் நதிக்கரை போலவும் மின்னுகின்றன.

சுத்தப்படுத்தப்பட்ட கழிவுநீர் மற்றும் நர்மதா நதி வாய்க்கால் ஆகியவற்றின் உதவியால், ஆண்டு முழுதும், துாய்மையான தண்ணீர் ஓடுகிறது.

இப்போது, ஆமதாபாத் நகரின், சபர்மதி நதியிலிருந்து, கேவடியா காலனியிள்ள உள்ள சர்தார் படேலின் ஒற்றுமைச் சிலைக்கு, 'ஹோவர் க்ராப்ட்' எனப்படும், நீரிலிருந்து செல்லும் விமான சேவை கூட உண்டு.

திராவிட கட்சியினர், லண்டன், பாரீஸ் செல்ல வேண்டாம்; அட்லீஸ்ட் குஜராத் வந்து, சபர்மதியைப் பார்த்துச் செல்லலாம். உ.பி.,யிலும், தலைநகர் லக்னோவில் உள்ள கோமதி நதியை சுத்தப்படுத்தி இருக்கிறார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வாரணாசியிலும், கங்கையைப் பாருங்கள்.

குஜராத் மாடல் என்ற தத்துவத்தைக் கண்டபடி விமர்சித்த கேரள முதல்வர் கூட, குஜராத்தின் வெற்றி ரகசியத்தை அறிந்து வர, தன் உயர் அதிகாரிகளை சத்தமில்லாமல் அனுப்பி இருக்கிறார்.

எனவே, மோதல் அரசியல் வாயிலாக மக்களுக்கு போக்கு காட்டி, பையை நிரப்பாமல், அறிவார்ந்த தமிழக அதிகாரிகளையும், விஷய அறிவு கொண்ட அமைச்சர்களையும் குஜராத்துக்கு அனுப்பி சபர்மதி நதிக்கரைத் திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு, கூவம் மற்றும் அடையாறை, அற்புதமாக மாற்றி அமைக்கும் வழிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாகவும், உடனடி இடைக்காலத் தீர்வாகவும், இந்நதிகளின் இருபுறமும் பேபி வாய்க்கால்களை அமைத்து, அவற்றில் சாக்கடை நீரை விடச் செய்யலாம்.

இந்நீர், எதிர்ப்புறமாக ஓடி, நகருக்கு வெளியே, தகுதியான இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு, ஆறுகளில் விழுமாறு ஏற்பாடு செய்யலாம்.

இதன் மூலம் கூவம் மற்றும் அடையாறு நதிகளை, பன்மடங்கு சீரமைத்து, ஆண்டு முழுதும், கணிசமாக சுத்தமான நீர் வருவதற்கு வகை செய்யலாம்.

இது எளிதான, அதிகம் பணச்செலவு ஏற்படுத்தாத மற்றும் விரைவில் செயல்படுத்தக் கூடிய வழிமுறையாக இருக்கும்.

இதே உத்தியை சாய நீர்க் கழிவுகளை ஆறுகளில் விடும் இடங்களில் கூடக் கடைபிடிக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us