Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பொறாமைப்படாதீர்கள் ராஜு!

பொறாமைப்படாதீர்கள் ராஜு!

பொறாமைப்படாதீர்கள் ராஜு!

பொறாமைப்படாதீர்கள் ராஜு!

PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, 'என் மகனோ, மருமகனோ, குடும்பத்தில் இருக்கும் வேறு யாருமோ, அரசியலுக்கு வர மாட்டர்' என்று உறுதி கூறினார் ஸ்டாலின்.

ஆனால் தன் மகன் உதயநிதியை அரசியலுக்கு கொண்டு வந்து, தி.மு.க.,வின் இளைஞர் அணிச் செயலராக்கினார். அதன் பின் உதயநிதி, எம்.எல்.ஏ.,வாக, இப்போது மந்திரியும் ஆகிவிட்டார். விரைவில் துணை முதல்வர் பதவி இவருக்கு கொடுக்கப்படப் போகிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.

'ஸ்டாலின் பேச்சில் முரண்பாடுகள் அதிகம் உள்ளன' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தெர்மாகோல் புகழ் செல்லுார் ராஜு, கமென்ட் அடித்திருக்கிறார்.

ஏதோ ஸ்டாலின் மட்டுமே தன் வாரிசுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் தந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார் என்று ராஜு சொன்னால், அதில் எந்தவித நியாயமும் இல்லை.

பா.ம.க., நிறுவனர் ராமதாசும் அப்படி தானே சொன்னார். ஆனால், தன் மகன் அன்புமணியை எம்.பி.,யாக்கினார் அல்லவா!

'நான் அரசியலுக்கு வந்து பட்ட அவஸ்தைகள் போதும்; என் மகன் துரை அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை' என்று சொன்னார் மானமிகு வைகோ.

இன்று துரை, எம்.பி.,யாகவும், ம.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்குத் திருமணம் நடந்தாலும்; வாரிசுகள் இல்லை; அவர் அண்ணன் சக்கரபாணிக்கு மகன்கள் இருந்தாலும், கட்சியில் எந்த பதவியும் வழங்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் வாரிசுகள் இல்லை; அவர் அண்ணனுக்கு, மகன், மகள் இருந்தும், கட்சி வாசனை கூட அவர்கள் மீது படக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்தார் ஜெயலலிதா.

அண்ணாதுரைக்கு வளர்ப்பு மகன்கள் இருந்தனர்; அப்படியிருந்தும் தன் மகன்களுக்கு கட்சியில் எந்த பதவியும் அவர் வழங்கவில்லை.

தலைவர் காமராஜர், கட்டைப் பிரம்மச்சாரி என்பதால் அவர் வாரிசு அரசியலுக்கு ஆளாகவில்லை.

தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் இருக்கும் முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் கட்சியில் 'பவர்புல்'லாக தானே வலம் வருகின்றனர். சிலருக்கு எம்.எல்.ஏ.,பதவியும், சிலருக்கு எம்.பி., பதவியும், சிலருக்கு கட்சிப் பதவிகளும் இருக்கத்தானே செய்கின்றன.

அரசியலில் யாரும், சத்தியம் தவறாத உத்தமர்கள் இல்லை.

எனவே, செல்லுார் ராஜு, கருணாநிதி குடும்பத்தினரைப் பார்த்து பொறாமைப்படுவதில் அர்த்தமே இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us