PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2014ல், 282 இடங்களில் தனியாக வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தது. அதைத் தொடர்ந்து, 2019ல், 303 இடங்களில் தனியாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
இருந்த போதும், தன் கூட்டணி கட்சிகளுக்கும், தன் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்த இரண்டு முறையும், பா.ஜ.,வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாததால், மீண்டும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான் வெற்றி பெறும் என்று, பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகள் கூறின.
பா.ஜ.,வும் தனக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று பேராசையோடு சுற்றித் திரிந்தது. ஆனால், பா.ஜ.,வுக்கு வெறும் 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது; சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவில் தான் ஆட்சி அமைக்க முடிந்தது.
இனி, அதிரடியாக எந்த புதிய சட்டத்தையும், முன்பு செய்ததைப் போல, சட்டென நிறைவேற்றி விட முடியாது.
இது தான் இப்படி என்றால், நாடு முழுதும் நடந்து முடிந்த, 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில், இரண்டு இடங்களில் மட்டுமே பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளதும், 'இண்டியா' கூட்டணி கட்சிகள், 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதும், பா.ஜ.,வுக்கு நிச்சயம் பின்னடைவு தான்.
இந்த ஆண்டு கடைசியில் வரவுள்ள, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்று, தன் ஸ்திரத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், 'இண்டியா' கூட்டணி வலுப்பெற்று வெற்றி பெறும். மிகவும் டாம்பீகமான, மிதப்பிலான நினைப்பிலிருந்து கீழிறங்கி, யதார்த்த உலகை உற்று நோக்கத் தவறியதால் தான், காங்கிரஸ் முன்பு, நாட்டை ஆளும் வாய்ப்பை இழந்தது; அதே தவறை பா.ஜ., செய்வது நல்லதல்ல.
வாழ்க பி.எஸ்.என்.எல்.,
அ.அப்பர்
சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நம்
நாட்டின் தொலைத்தொடர்பு துறையில், மிகவும் பழமையான, பி.எஸ்.என்.எல்.,
நிறுவனம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில்
தொடர்பு கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தி, முதன் முதலில் புரட்சி செய்தது.
விஞ்ஞான
வளர்ச்சி யுகத்தில், தனியார் துறைகளின் ஆதிக்கத்தால், சற்றே பின்னடைவை
சந்தித்து இருந்தபோதிலும், கொஞ்சமும் மனம் தளராமல், தரம் நிரந்தரம் எனும்
தாரக மந்திரத்துடன் செயல்பட்டு, தற்போது சுக்கிரதசையை நோக்கித்
திரும்பியுள்ளது.
காரணம், தொலைத் தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு தான்.
தனியார்
நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்தபோது, மிகச் சாதாரண மக்களும்
மொபைல்போன்களைப் பயன்படுத்தும் வகையில், மிகக் குறைந்த கட்டணத்தை
வசூலித்தன.
ஆண்டுகள் உருண்டோடி, அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டபோது,
நிலைமையைத் தாக்கு பிடிக்க முடியாமல், மெள்ள மெள்ள கட்டணத்தை உயர்த்தத்
துவங்கின.
இப்போது முட்டி மோதிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி விட்டன.
இதனால், நொடித்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல்., பக்கம், மக்கள்திரும்பத்
துவங்கி விட்டனர்.
எப்பொழுதும் சீரான கட்டணத்தையே வைத்துள்ள
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, 29.75 லட்சம் வாடிக்கையாளர்கள், ஒரே
வாரத்தில் மாறி உள்ளனர்.
தற்போதைய நிலையில், 4ஜி அலைக்கற்றையைத்
தான் இந்நிறுவனம் கொடுக்கிறது. தற்போதைய நிலையிலேயே வளர்ச்சி கண்டால், வெகு
சீக்கிரத்தில் 5ஜி அலைக்கற்றைக்கும் மாறும் சூழல் ஏற்படலாம்.
இதனால், பி.எஸ்.என்.எல்., இணைப்பின் வேகம் துரிதமாகி விடும்.
தனியார் பக்கமே திரும்ப வேண்டி இருக்காது. வாழ்க, அரசின் பி.எஸ்.என்.எல்., நிறுவனம்!
ரஞ்சித் ஆவேசத்தின் பின்னணி என்ன?
கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'ஆம்ஸ்ட்ராங்
படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை' என, நீலம் பண்பாட்டு மையம்
சார்பில் பேரணி நடத்தி, அதில் பேசிய சினிமா இயக்குனர் ரஞ்சித் சூளுரைத்து
உள்ளார்.
மேலும், 'இந்த கொலையில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்.
தலித் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க விடாமல் செய்கின்றனர். எங்களுடைய
உரிமைகளை கேட்டால் எங்களை, 'பி டீம்' என்கின்றனர்.
'நாங்கள்
அம்பேத்கரின்பிள்ளைகள்; யார் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை.
நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். திருமாவளவனுக்கு எதிராக ஒரு
நாளும் இருக்க மாட்டோம். தலித் ஆகிய நாம் யாருக்கு எந்த பிரச்னை வந்தாலும்
எல்லாரும் ஒன்று சேர வேண்டும்' எனவும் பேசியுள்ளார்.
அவரது ஆதங்கம்
நியாயமானதே. ஆயினும், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த
பிரச்னையின்போது, திருமாவளவன், ரஞ்சித்திடம் இந்த ஆவேசத்தை பார்க்க
முடியவில்லையே.
அமைச்சர் பொன்முடி விழா மேடையில் கவுன்சிலரை
பார்த்து, 'ஏம்மா நீ எஸ்.சி., தானே' என்று கேட்டபோது, திருமாவும்,
ரஞ்சித்தும் எங்கே போயிருந்தனர்.
டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும்,
'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா' என பொங்கிய போது, திருமாவும்,
ரஞ்சித்தும் அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது ஏன்?
ஆடம்பரமான
சோபாவில் அமைச்சர்ராஜ கண்ணப்பன் அமர்ந்தபடி, திருமாவை சாதாரண பிளாஸ்டிக்
சேரில் அமர வைத்து பேசியதை கண்டபோது, ரஞ்சித்துக்கு ரத்தம்
கொதிக்கவில்லையா?
மணல் கொள்ளையை தடுக்கப் போன தலித் வி.ஏ.ஓ., கொலை
செய்யப்பட்டபோது திருமாவும், ரஞ்சித்தும் எங்கே போயிருந்தனர். நெல்லையில்,
ஜாதி வெறியில் பள்ளி மாணவன்வெட்டப்பட்ட போது, திருமாவும், ரஞ்சித்தும் என்ன
செய்து கொண்டிருந்தனர்.
எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முன்பே,
மேற்கண்ட பிரச்னைகளில் ரஞ்சித் குரல் எழுப்பியிருந்தால், அவரது சமூக
நலனையும், தலித்கள் மீதான பாசத்தையும் பாராட்டலாம். ஆனால், தற்போது மட்டும்
குமுறுவது ஒரு சார்பு அரசியலாகவும், தன் தங்கலான் படத்துக்கான
விளம்பரத்துக்காகவும் செய்வது போலவே தோன்றுகிறது.