Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பதவி வெறி படுத்தும் பாடு!

பதவி வெறி படுத்தும் பாடு!

பதவி வெறி படுத்தும் பாடு!

பதவி வெறி படுத்தும் பாடு!

PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நிறைவேற்றவே இயலாத, 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கியும், 28 அரசியல் கட்சிகளை அவியலாக கூட்டியும், லோக்சபா தேர்தலில், 234 தொகுதிகளுக்கு மேல், 'இண்டியா' கூட்டணியால் சாதிக்க முடியவில்லை.

ஆட்சியை பிடித்து விடலாம்; ஆனந்த கூத்தாடி விடலாம் என்று பகல் கனா கண்டவர்கள் அனைவரின் ஆசையும் நிராசையானது தான் மிச்சம்.

அதை தாங்கி கொள்ள முடியாத அந்த அவியல் கூட்டணிக் கட்சிகள், பார்லிமென்ட்டை நடத்த விடாமல் முடக்குவதிலேயே குறியாக உள்ளன.

அந்த அவியல் கூட்டணிக்கு, 234 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை வழங்கிய வாக்காளர்களும், 'அடடா... ஏமாந்து விட்டோமே...' என்று தலையில் கையை வைத்து, புலம்பத் துவங்கி விட்டனர்.

கடந்த லோக்சபா கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு பதிலளித்து பிரதமர் பேசும் போது, ஏராளமான களேபரங்கள் அரங்கேறின. பிரதமர் மோடியின் பேச்சை கேட்க விடாமல் தடுக்க, அந்த அவியல் கூட்டணி கட்சியினர் கூச்சல் போட்டபடி இருந்தனர். சபையின் நடுவே நின்று, பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த அவலங்களுக்கு முக்கிய காரணமே, காங்., இளவரசர் ராகுல் தான்.

பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டைப்பற்றி, அயல் நாடுகளில் அவதுாறு பரப்பியது போதாது என்று தற்போது, உள்நாட்டிலும் பார்லிமென்ட்டை, 'மீன் மார்க்கெட்'டாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த அவியல் கூட்டணி கட்சிகளின் அடாவடிகள், பிரதமரின் பாதுகாப்பை கவனிக்கும், எஸ்.பி.ஜி., அமைப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆட்சியில் அமர்ந்து கொள்ளைஅடிக்க முடியாத வெறுப்பில், ஒருவேளை பார்லி.,யிலேயே பிரதமரை கீழே தள்ளி விடுவது அல்லது அவரை தாக்கும் நிலை கூட ஏற்படலாம்; எனவே, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என அதிகாரிகள் ஆலோசித்து வருகிறனராம்.

இந்திரா என்ற பிரதமரை, அவருக்கு மெய்க்காவலர்களாக இருந்தவர்களே, பொய்காவலர்களாகி மாறி சுட்டுக் கொன்றதை நாம் மறந்து விடக்கூடாது.

பதவி வெறி பிடித்தவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

எனவே, எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே ஏதாவது ஒரு தடுப்பு போன்ற ஏற்பாட்டை செய்யலாமா என ஆலோசித்து வருகின்றனராம். சிங்கத்தை, பார்லிமென்டிலேயே கண்ணாடி தடுப்பு வைத்து பாதுகாத்துக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக்கி விட்டனரே, இந்த பதவி வெறி கொண்டு அலைபவர்கள்!

இனிமேலும் இந்த பாவிகளுக்கு, இந்த நாட்டிலுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பரா?



காமராஜர் ஆட்சி இனி ஏட்டில்!


என்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நஷ்டத்தில் மின் வாரியம் இயங்கும் போது ஒரு சில பிரிவினருக்கு மின்சாரத்தை இலவசமாக ஏன் வழங்க வேண்டும்?' என, வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

திராவிட மாடல் அரசு, மின்சாரத்தை மட்டுமா இலவசமாக வழங்குகிறது?

பஸ் போக்குவரத்து துறை கூட கோடிக்கணக்கில் நஷ்டத்தில்தான் இப்போது இயங்குகிறது.

அப்படியிருந்தும் கூட பெண்களுக்கு பஸ்ஸில் இலவசப் பயணம் செய்ய திராவிட மாடல் அரசு சலுகைகள் வழங்குகிறது.

பெண்களுக்கு மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் பஸ்ஸில் இலவசப் பயணம் செய்ய பாஸ் வழங்குகிறது. முதியவர்களுக்கு பஸ்ஸில் இலவசப் பயணம் செய்ய பாஸ் வழங்குகிறது.

கைதிகளை வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் போது காவல்துறையினர் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதைவிட பெரிய கூத்து என்ன தெரியுமா...

நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியம் மற்றும் போக்குவரத்து துறையில் பணி செய்பவர்களுக்கு, தீபாவளி போனஸ் என்ற பெயரில் கணிசமான தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

போனஸ் என்பது, ஒரு துறையோ, வாரியமோ லாபத்தில் இயங்கும் போது வழங்கப்படும் ஒரு தொகை என்ற, 'லாஜிக்' எல்லாம் காலாவதி ஆகிவிட்டது.

மின் வாரியம் இப்போது அடைந்திருக்கும் நஷ்டம் எவ்வளவு, மின்கட்டண உயர்வால் இந்த நஷ்டம் எந்த அளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது, இன்னும் எவ்வளவு தொகை சரி செய்யப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களை மின் வாரியம் வெளியிடவில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை இந்த அரசு தடை செய்ய நிச்சயம் வாய்ப்பே இல்லை; பெண்கள் மாணவர்கள் முதியவர்கள் காவல்துறையினர் பஸ்ஸில் இலவசப் பயணம் செய்வதையும் இந்த அரசு கைவிடாது.

தி.மு.க., கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனில், இந்த மாதிரி இலவசங்கள் அவசியம் வேண்டும்.

ஒரு சிலர் இலவச சலுகைகள் அனுபவிக்க, பலர், மின் கட்டணம், பஸ் கட்டணம் உயர்வை, தாங்கி கொள்ளத்தான் வேண்டும். இது தான் நம் தலையெழுத்து. மக்களுக்கு எந்த இலவசமும் வழங்காமல், பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தில் ஏழு ஆண்டுகள், சிறப்பாக பொற்கால ஆட்சி நடத்தினார்.

அதெல்லாம் இனி ஏட்டில் மட்டுமே!



வேண்டாம் ஜனநாயக விரோதம்!


வெ.சீனிவாசன், திருச்சி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாம் தமிழர்' கட்சிக்காரர் சாட்டை துரை முருகன், கருணாநிதியை விமர்சனம் செய்த குற்றத்திற்காக, கைது செய்யப்பட்டுள்ளார். கருணாநிதியை விமர்சனம் செய்ததனால், கட்சிகளுக்கிடையே விரோதமும், பொது அமைதிக்குப் பங்கமும் ஏற்படும் என்பது, தி.மு.க., சொல்லும் காரணம்.

பா.ஜ.,வின் கொடிகளை ஏற்ற விடாமல் தடுப்பது, ஏற்றப்பட்ட கொடிகளை அனுமதியில்லை என்று கூறி அழிப்பது, ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் பெயர் பெற்ற ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது, பா.ஜ.,வை வளர விடாமல் தடுப்பது.

ஆளுங்கட்சியை விமர்சிக்கத் துணிபவர்களை உடனே கைது செய்வது போன்ற செயல்பாடுகள், கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி, ஜனநாயக விரோதம், அதிகார துஷ்பிரயோகமும்கூட.

காவல்துறையினர், ஆளுங்கட்சியினரின் கைப்பாவை போன்று செயல்படாது, பாரபட்சமின்றி, சட்டப்படி செயல்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள், அரசியல் சாசன புத்தகத்தைத் துாக்கிப் பிடித்தபடி, ஏதோ இவர்கள் தான் இந்திய அரசியல் சாசனத்தையே காப்பாற்ற வந்தவர்கள் போல நடித்து, பார்லி., உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்; ஆனால், களத்தில் அதற்கு நேர் மாறாக செயல்படுகின்றனர்.

இவர்களை நம்புவது நல்லதல்ல.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us