PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.4 டி.எம்.சி., ஆகும். இந்த அணையின் தண்ணீர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை மட்டுமின்றி, கரூர், நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.
அதற்கு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீரை, ஆண்டுதோறும் முறையாக, ஒழுங்காக, நேர்மையாக, நாணயமாக நடுவர் மன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு வழங்க வேண்டும்.
ஆனால், வழங்க வேண்டிய காவிரி நீரின் பங்கை, கர்நாடக அரசு வழங்க சண்டித்தனம் தான் செய்கிறது. 'எங்களுக்கே குடிநீர் தட்டுப்பாடு, அணையில் போதிய இருப்பு இல்லை' என்று நொண்டிச் சாக்குகளைச் சொல்லி, முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் 13 நாட்களில் அணை முழுதும் வறண்டு விடும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிட மாடல் அரசு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை கொய்யக் காட்டிய ஆர்வத்தில் ஒரு சதவீதத்தை கூட, டெல்டா மாவட்ட பாசன தேவைகளையும், சென்னை உட்பட பல மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் நிவர்த்தி செய்ய வேண்டிய எதையும் கண்டு கொள்ளவே இல்லை.
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழகத்தை ஆளும் கழக அரசோடு இண்டியா கூட்டணியில் இணைந்து இருக்கலாம்.
அதனால், கோரிக்கை விடுக்கவோ, பேச்சு வார்த்தை நடத்தவோ அந்த கூட்டணி தர்மம் தடுக்கலாம்; ஆனால், தண்ணீரை தராது. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்; அழாமல் இருந்தால் பட்டினி தான் கிடக்கும்.
கழக அரசின் இந்த அமைதியை கூர்ந்து நோக்கும் போது நமக்கு, ரஷ்யாவில் நடந்த ரஷ்யப் புரட்சி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
அங்கு ஜார் மன்னனின் ஆட்சி காலத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் பசிப் பட்டினியோடு, கிரெம்ளின் மாளிகையை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்திய போது, அந்நாட்டு அரசி, 'ரொட்டி கிட்டவில்லையானால் என்ன? கேக் சாப்பிடட்டும்!' என்று திமிர்த்தனமாக கூறினாளாம். அதுபோல, நம்மை ஆளும் திராவிட மாடல் கழக அரசும், 'குடிக்க தண்ணீர் இல்லையானால் என்ன? பியர் குடிக்கட்டும்' என்று சொன்னாலும் சொல்லலாம்.
போதையில், போராடும் குணத்தை முற்றிலும் மறந்த தமிழக மக்களும், கழக அரசின் ஆலோசனை சிரமேற்கொண்டு, பியர் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்ள முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மவுனிகளாகும் அரசியல் 'வியாதிகள்!'
ஆர்.பழனிசாமி,
தீத்திபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: ஓர் உயிரைக் காப்பாற்றினாலே கடவுள் என்கிறோம்; 140 கோடிக்கும்
மேலானோரை காக்கும் வீரர்கள் கடவுளுக்கு நிகரானவர்களே!
அப்படியானோர்
வீர மரணமடைந்தால், பல மாநில அரசுகள் இரங்கல் கூட தெரிவிப்பதில்லை. மத்திய
அரசு மட்டுமே இரங்கல் தெரிவிப்பதும், நிவாரணம் அறிவிப்பதுமாக உள்ளது.
சில
சமயங்களில் தங்கள் மாநில வீரராக இருந்தால் மட்டும், ஒரு லட்சமோ, 2 லட்சமோ
கொடுக்கின்றனர். ஆட்சியாளர்களே, அரசியலுக்காக பிரித்துப் பார்க்கின்றனர்.
வீரர்கள், ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாவலர்கள். வீரர்கள் பாகுபாடு பார்த்தால் என்னவாகும் என்பதை மறக்காதீர்கள்.
கடந்த
சில நாட்களில் மட்டும், ஜம்மு - காஷ்மீரில் இயற்கை பேரிடர், பயங்கரவாதிகள்
தாக்குதல் என, பல வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு, பெரும்பாலான மாநில
ஆட்சியாளர்கள் கண்டனம், இரங்கல், நிவாரணம் அறிவித்ததாக செய்தி இல்லை.
ஆனால், கள்ளச்சாராயம், ஜாதி, மத மோதல் இறப்புகளுக்கு பல லட்சங்களை கொட்டி கொடுக்கின்றனர்.
இரங்கல் செய்திகளை நீட்டி வாசித்து, நீலிக்கண்ணீர் வடித்து ஊடகங்களுக்கு கொடுக்கின்றனர்.
மாறாக,
மண்ணையும், மக்களையும் காக்கும் வீரர்களுக்கு நேசக்கரம் நீட்டாமல்
மவுனிகளாகின்றனர். இத்தகையோரை, ஓட்டு அரசியல் வியாதி கள் என்று கூறுவதில்
தவறேதும் இல்லை.
இனி, வீர மரணமடையும் வீரர்களுக்கு, பாகுபாடின்றி அனைத்து மாநில அரசுகளும் உரிய மரியாதை அளித்து, நிவாரண நிதி வழங்க வேண்டும்.
ஆட்சியாளர்களின்
அப்பன் வீட்டு பணத்தில் இருந்து வேண்டாம்; தேசம் காக்கும்,
'கடவுள்'களுக்கு எங்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுங்கள் என்பதை,
'உண்மையின் உரைகல்' வாயிலாக உரக்க கூறுகிறேன்.
வாழ்க அறிவுஜீவிகள்!
ம.சுபாஷினி,
சென்னையில் இருந்து எழுதுகிறார்: நாய்கள் பலரை குதறிய பின், வீட்டில்
நாய் வளர்க்க லைசென்ஸ் பெற வேண்டும் என்றும்; மாடு முட்டியதும், அதை
வளர்க்க உரிமம் பெற வேண்டும் என்றும், ஏதோ புதிதாக மக்களுக்காகவே சட்டம்
உருவாக்கியது போல் காட்டுவதில், அரசியல்வாதி கள் கைதேர்ந்தவர்கள்.
வீட்டில்
நாய், பூனை வளர்க்க உரிமம் பெற வேண்டும் என, பல மாநிலங்களில் நடைமுறை
உள்ளதாகவும், நொய்டாவில் புதிதாக, உரிமம் கட்டாயமாவதாகவும், செய்தி
வெளியாகி உள்ளது. முன்பெல்லாம், தெரு நாய்களைப் பிடிக்க கார்ப்பரேஷன்
லாரிகள் வரும்; 'பெடா' அமைப்பினர் எதிர்த்ததும், அது விலக்கிக்
கொள்ளப்பட்டுள்ளது.
இதே, 'பெடா' அமைப்பினர், நாய்க் கடியால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த முன்னுரிமை அறிவிப்பும்
வெளியிடுவதில்லை என்பது வேடிக்கை; மனிதர்களும் விலங்கினத்தைச்
சேர்ந்தவர்கள் தானே! மனிதர்களால் பேச முடியும்; நான்கு கால் உள்ள
விலங்கினங்களால் கத்த முடியும்; அவ்வளவு தான் வித்தியாசம்!
மாடு,
நாய்களை, கார்ப்பரேஷன் நபர்கள் கொண்டு செல்ல, பொதுவான போன் எண்களை
மாநகராட்சி கமிஷனர் அறிவிக்கலாம். அதை விட்டுவிட்டு, ஏதேதோ நடக்கிறது.
தமிழகத்தில்
ஆட்சிக்கு வருபவர்கள், மூக்கை நேரடியாக தொடாமல், தலைக்கு மேல் கையைச்
சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் பாணியிலேயே தான் செயல்படுகின்றனர். வாழ்க
அந்த அறிவுஜீவிகள்!