Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ராகுல் குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை!

ராகுல் குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை!

ராகுல் குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை!

ராகுல் குற்றச்சாட்டில் அர்த்தம் இல்லை!

PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி, தன் அமைச்சரவையில், 20 அரசியல் வாரிசுதாரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருப்பதாக குற்றம் சொல்லி இருக்கிறார், காங்., - எம்.பி., ராகுல். இந்தியாவில் நேரு குடும்பத்தில் மட்டுமே மூன்று பேர் பிரதமர் பதவி வகித்துள்ளனர். அது மட்டுமின்றி சோனியா, மேனகா, வருண், ராகுல் என பலர் எம்.பி., பதவி வகித்துள்ளனர்; வகிக்கின்றனர்.

'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவின் மனைவி, மகன் அரசியலில் முக்கிய பதவிகள் வகித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன், மகள், மருமகன், பேரன்கள் முக்கிய பதவிகள் வகிக்கின்றனர்.

தி.மு.க., அமைச்சர்களின் வாரிசுகளும் எம்.பி.,க்களாக இருக்கின்றனர். ஆனால், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசியலில் எந்த பதவியும் கொடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரதமர் மோடியைக் குறை சொல்லும் முன், தன் பரம்பரையில் எத்தனை பேர் அரசியலில் முக்கிய பதவிகளில் இருந்தனர் என்பதை அலசி ஆராய்ந்து, ராகுல் பேசி இருக்க வேண்டும். இவரது அருமை சகோதரி பிரியங்கா, காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் தானே இருக்கிறார்?

இந்தியாவில், அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு பஞ்சமே இல்லை என்ற நிலை தானே இருக்கிறது. பிரதமர் மோடிக்கு வாரிசுகள் இல்லை என்பதால், அவர் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரிடையாக குற்றம் சுமத்த முடியவில்லை.

பிரதமர் மோடியைக் குற்றம் சொல்லும் முன், தன் குறைகளை எண்ணிப் பார்த்து ராகுல் பேசி இருக்க வேண்டும்.

'என் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை' என்று சொன்ன ம.தி.மு.க., தலைவர் வைகோ, இன்று அவரது மகனுக்கு கட்சியில் முக்கிய பதவியைக் கொடுத்து, எம்.பி.,யும் ஆக்கியிருப்பது ராகுலுக்கு தெரியாதா என்ன?

உ.பி.,யில் அகிலேஷ் தானும் எம்.பி., யாகி, மனைவியையும் எம்.பி.,யாக்கி இருக்கிறார். இப்படி, 'இண்டியா' கூட்டணியில் இருக்கும் அரசியல் தலைவர்கள், தங்களது வாரிசுகளுக்கு பதவிகள் வழங்கி இருக்கும் போது, பிரதமர் மோடி மீது மட்டும் ராகுல் குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.



அரசியல் வரலாற்றில் புதுமை!


-ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்:லோக்சபா தேர்தல் முடிவுகளின் ஆரவாரங்கள் அடங்கியுள்ளன. எப்போதும் ஒரு தேர்தல் முடிவிற்கு பின் அது பற்றிய எதிரான கருத்துக்கள் சிலரிடம் பலமாக கிளம்பும். ஆனால், இந்த தேர்தலில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் அடியோடு காணவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது.

'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் குளறுபடியால் தான், மோடி பெரும்பான்மையான இடங்களில் வென்றார்' என்ற வழக்கமான வாதம் எங்கும் தென்படவில்லை என்பதுதான் முதலில் வியப்பான செய்தியாகும்.

அடுத்து, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு 10 முதல் 15 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருப்பதும், கேரளாவில் பா.ஜ., ஓரிடத்தில் வெற்றி பெற்றிருப்பதுமே இதற்கு சரியான உதாரணங்கள். ஏற்கனவே, கர்நாடகாவில் பா.ஜ., வலுவான கட்சியாகவே திகழ்கிறது. ஆந்திராவிலும் தற்போது கணிசமான வெற்றியை ஈட்டியுள்ளது.

இதன் வாயிலாக, திராவிட கட்சிகளின் குற்றச்சாட்டான, 'வடமாநிலங்களில் தான் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளது. தென் மாநிலங்களில் அக்கட்சி காலுான்ற முடியாது' என்ற வாதமும் இந்த தேர்தலில் அடிபட்டு போய் விட்டது.

'இண்டியா' கூட்டணிக்கு கணிசமான இடங்கள் கிடைத்துள்ளன என்றாலும், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ளனர் என்றும் கூற முடியாது. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு வலிமையான எதிர்க்கட்சி அணி தேவை என்பதையே மக்கள் கருதியுள்ளனர் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா முழுதுமாக, 'நோட்டா' ஓட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளதன் வாயிலாக, இது நியாயமாக நடந்த தேர்தல் என்பதும் உறுதியாகியுள்ளது. இப்படியாக, நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், விசித்திரமான பல விஷயங்களை பிரதிபலித்துள்ளது. இது, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதுமை என்றே சொல்லலாம்.



ஓணானை எடுத்து மடியில் விடலாமா?


பொ. ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் தோல்வியை அடுத்து, 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் மீண்டும் அ.தி.மு.க.,வில் பழனிசாமி சேர்த்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்ற குரல்கள் எழுந்துள்ளன.

தற்போது, அ.தி.மு.க., பிளவுபட்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வில் தான் பெரும்பாலான தலைவர்களும், தொண்டர்களும் இருக்கின்றனர்; இரட்டை இலை சின்னமும் அவர்களிடம் தான் உள்ளது.

மாறாக, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர் பின்னால் பெரிய அளவில் தொண்டர்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு உறைக்குள், ஒரு கத்தி தான் இருக்க முடியும் என்பர். அதற்கேற்ப அ.தி.மு.க., இப்போது பழனிசாமி தலைமையில், ஒற்றுமையுடன் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சசிகலா, பன்னீர், தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்த்தால் சில ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கலாம். ஆனால், இப்போது இருக்கும் ஒற்றுமை இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் மூவரும் கண்டிப்பாக வேறு யார் தலைமையின் கீழும் பணியாற்ற மாட்டர்.

தலைமை பதவியை பிடிக்க, கட்சியை கைப்பற்ற அவர்களுக்கென்று கோஷ்டிகளை வளர்ப்பர்; பழனிசாமி, அவரது ஆதரவாளர்களை ஓரம் கட்டுவர். தப்பி தவறி சசிகலா தலைமை பதவிக்கு வந்து விட்டால் பழனிசாமி, பன்னீர்செல்வம் உட்பட பெருந்தலைகள் அவர் காலில் விழுந்து கிடக்க வேண்டிய அசிங்கமும் அரங்கேறும். இதெல்லாம் தேவையா?

அவர்கள் மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்பது, வேலியில் போகும் ஓணானை பிடித்து மடியில் விடுவதற்கு சமம். எனவே, அவர்கள் மூவரை தவிர அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்காக பழனிசாமி முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. அத்துடன், கொஞ்சம் விட்டுக் கொடுத்து, பா.ஜ., உட்பட மற்ற கட்சிகளுடன் பலமான கூட்டணியை அமைப்பதும், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்துக்கு நல்லது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us