Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ 80 லட்சம் தான்; 2 கோடி எங்கே?

80 லட்சம் தான்; 2 கோடி எங்கே?

80 லட்சம் தான்; 2 கோடி எங்கே?

80 லட்சம் தான்; 2 கோடி எங்கே?

PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
எ.சிரில் சகாயராஜ், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது' என அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

வாக்காளர்களை ஏமாற்றி, கூட்டணி அமைத்து, ஓட்டுகளை அறுவடை செய்யும் அரசியல் கட்சிகள், 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று, பொழிப்புரை ஆற்றுவது வழக்கம்.

கால்பந்து போட்டியோ, கைப்பந்து போட்டியோ, டென்னிஸ் போட்டியோ, கிரிக்கெட் போட்டியோ, கேரம் போட்டியோ, ஓட்டப்பந்தயமோ, ஹர்டில்ஸோ, நீளம் தாண்டுதலோ, உயரம் தாண்டுதலோ, குண்டு எறிதலோ, மல்யுத்தமோ, குத்துச்சண்டையோ எந்த போட்டியாக இருந்தாலும், மோதும் இரண்டு அணிகளோ, இரண்டு நபர்களோ கூட்டணி அமைத்து போட்டி போட முடியுமா? விளையாட்டு போட்டி விதிகள் அதை அனுமதிக்குமா? அனுமதிக்காது அல்லவா!

மேல்நிலை பள்ளிகள், கல்லுாரிகள் போன்ற சர்வகலா சாலைகளில் நடத்தும் தேர்வுகளில் தேர்வெழுதும் மாணவர்களில், இருவர் அல்லது மூவரை கூட்டணி அமைத்து தேர்வெழுத, கல்வித் துறையினர் அனுமதிப்பரா?

அப்படி இருக்கையில், தேர்தலுக்கு மட்டும் எதற்கு கூட்டணி? தேவையில்லையே?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்...

இத்தனை ஆண்டுகளாக அ.தி.மு.க., என்ற அண்ணாயிசக் கொள்கையை பின்பற்றும் அரசியல் கட்சி, அக்கட்சிக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் உள்ளதாக கதையளந்து, கப்சா விட்டுக் கொண்டிருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், அக்கட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி, காட்டிக் கொடுத்து விட்டது.

அக்கட்சி இத்தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் சேர்த்து, 80 லட்சத்து சொச்சம் ஓட்டுகளே பெற்றிருக்கிறது. பல தொகுதிகளில் டிபாசிட்டையும் பறி கொடுத்துள்ளது.

இந்த நிலையில், 'தேசிய கட்சிகளுடன் இனி கூட்டணி அமைக்கக் கூடாது' என, பழனிசாமி முடிவெடுத்திருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்...

நிரந்தர பகைவன் என்ற அரசியல் பழமொழியை முன்வைத்து, 2026 சட்டசபை தேர்தலின் போது பழனிசாமி, அகில இந்திய அல்லது மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து, வாக்காளர்களை மோசடி செய்து ஏமாற்றி, ஓட்டுகளை அறுவடை செய்து ஆட்சியில் அமர முனைவாரா அல்லது 'பல்டி' அடிக்காமல், கொண்ட கொள்கையில் உறுதியோடு நிலைத்து நிற்பாரா?



கொஞ்சம் இவரை எட்டிப் பாருங்கள் ப்ளீஸ்!


எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது தலித்களுக்கு என்று, தனித்தனியாக ஜாதி கட்சி நடத்தும் விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தமிழக முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முறையே திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், பூவை ஜெகன் ஆகியோர் ஒரு விஷயத்தை அறிந்திருக்கின்றனரா என்று தெரியவில்லை.

ஜாதிக் கட்சிக்கான ஆரம்ப விதை, 1977ல் விருதுநகர் லோக்சபா தொகுதியில் விதைக்கப்பட்டது. தலித் பிரிவைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினர் ஒன்றிணைந்து, ஒரு இளைஞரை வேட்பாளராக நிறுத்தினர்.

நாட்டில் எந்த சமூகத்திற்குமே தனி அமைப்பு இல்லாத காலம் அது. அந்த நேரத்தில், இப்படி ஒரு இளைஞர் போட்டியிட்டதும், பெரும் எழுச்சி உருவாயிற்று.

தேர்தலில் போட்டியிட்ட இந்திரா காங்கிரஸ் வேட்பாளரும், ஜனதா கட்சி வேட்பாளரும், தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோமோ என எண்ணி பயந்தனர்.

அந்த தேர்தலில், தலித் வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அவர் அன்று வாங்கிய ஓட்டு எண்ணிக்கை, 66,000; சின்னம், பானை!

அந்த இரு சமூகத்தினரும் சேர்ந்து உருவாக்கிய கொடியின் நிறம், சிவப்பும், பச்சையும் கொண்டதாக இருந்தது.

தற்போது அந்த சின்னத்தை விடுதலை சிறுத்தை கட்சியினரும், கொடியை புதிய தமிழகமும் பயன்படுத்துகின்றன. தலித் சமூகத்திற்காக தன் வேலையை இழந்து, பொருளாதாரத்தை இழந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அந்த இளைஞரின் பெயர், எஸ்.பி.ராஜ்; தற்போது அவருக்கு வயது, 82.

இவர் விதைத்த விதையால் இன்று, தலித்களின் தலைவர்களாக, வசதி வாய்ப்புடன் உலா வருவோர், இவரை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்; அம்பேத்கர் விருது வழங்கலாம், தவறில்லை!

'புருடா' விடாதீர்கள் ராகுல்!


ஆர்.ஜெயகுமார், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடால் தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என அரசு திரும்ப திரும்ப கூறுகிறது' என்கிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.

சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவில் கூட, முறைகேடுகள் நடந்துள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், காங்கிரஸின் 'கை' சின்ன பொத்தானை அமுக்கினால், அந்த ஓட்டு பா.ஜ.,வின் 'தாமரை' சின்னத்தில் பதிவாகிறது என்றெல்லாம் கூட 'உருட்டி' கொண்டிருந்தீர்கள்.

உருட்டிக் கொண்டிருந்தது மட்டுமின்றி, உங்களால் நியமனம் செய்யப்பட்ட சில உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சில மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்று, 'அக்கடா'வென வீட்டில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளை வைத்து, ஜனாதிபதிக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கூட கடிதம் எழுதி, 'ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., எந்த லெவலுக்கும் கீழிறங்கி வரும். ஓட்டுப் பதிவில் முறைகேடுகள் நடக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில், நீங்கள் தான் களத்தில் இறங்கி, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்' என்றெல்லாம் கூட 'புருடா' விட்டீர்கள்.

ஆனால், உண்மையில் உங்கள் காங்கிரஸ் கட்சிதான், ஏழை பெண்களுக்கு ஜூன்- 5, -2024 அன்று மாலை, முதல் தவணை தொகையாக, 8,500 ரூபாய், மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் என்று, ஆதார் அட்டை எண்ணை இணைத்து, உ.பி., மாநிலத்தில் டோக்கன் வழங்கி, ஏழைப் பெண்களை வரவழைத்து கண்ணீர் சிந்த வைத்தீர்கள்.

நேர்மையையும், நாணயத்தையும், உண்மையையும், ஜனநாயகத்தையும் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

உங்கள் டுபாக்கூர் வாக்குறுதிகள், புருடாக்களால், நாட்டிலுள்ள 140 கோடி குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சிக்காரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் உண்டா?







      Our Apps Available On




      Dinamalar

      Follow us