PUBLISHED ON : ஜூன் 04, 2024 12:00 AM

எச். ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டுமானால், அந்த நாட்டு அரசாங்கமும், நீதிமன்றங்களும், காவல்துறையும், சட்டங்களும் கடுமையாக இருக்க வேண்டும்.
இந்த நாட்டில் அப்படி இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில்.
அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், இரு ஆண்டுகளில் லஞ்சம் வாங்கும் போது சிக்கி, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம். எனினும், மாநகராட்சி, தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில், லஞ்சம் வாங்குவதை தடுக்கவே முடியவில்லையாம். அப்படி இருக்கும் போது லஞ்சத்தை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்?
நீண்ட நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில், 'லஞ்சம் வாங்கினேன், கைது செய்தனர்; லஞ்சம் கொடுத்தேன், விடுதலை செய்தனர்!' என ஒரு ஜோக் வெளியானது.
உண்மையில் நாட்டு நிலவரம் இப்படித்தானே கலவரமாக உள்ளது!
அனேகமாக கடந்த இரு ஆண்டுகளில், லஞ்சம் வாங்கும் போது சிக்கி கைதான அந்த 13 பேர், தற்போது ஜாம் ஜாம் என்று ஜாமின் பெற்று வெளியே நடமாடிக் கொண்டிருந்தாலும் அதில் ஆச்சர்யமில்லை.
நிலவரம் இப்படி இருந்தால், லஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்?
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், வெடிகுண்டு வீசுதல், லஞ்சம் வாங்குதல் போன்ற எத்தகைய குற்றங்களில் ஈடுபட்டாலும், அந்த குற்றவாளிகளுக்காக, வரிந்து கட்டி வாதாட ஒரு வக்கீல் கூட்டமே காத்திருக்கிறது.
லஞ்சம் வாங்கி கைதானவர்களை, உடனடியாக டிஸ்மிஸ் செய்து, அவருடைய, அவர் குடும்பத்தினருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து, பள்ளி - கல்லுாரியில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு, 'டிசி' கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால், இத்தகைய குற்றங்களைத் தடுக்கலாம்.
இப்படி தண்டனை கொடுக்கத் துவங்கினால், லஞ்சப் பிசாசுகளை, பெண்டாட்டி என்ன... பிள்ளைகள் கூட காரித் துப்புவர். லஞ்சம் நாட்டை விட்டே, பின்னங்கால் பிடரியில் பட, தெறித்தோடும்.
இந்த நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு தைரியம் உண்டா?
கூடவே, மனித உரிமை கமிஷன் என்ற லேபிளை ஒட்டிக் கொண்டு, உள்ளே நுழைந்து குட்டையை குழப்புபவர்களையும், லஞ்ச வழக்குகளில் மூக்கை நுழைக்க தடுக்க, நடவடிடக்கை எடுக்க வேணடும். நடக்குமா?
இவர்களை கைதுாக்கி விடப் போவது யார்?
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி,விருதுநகர் மாவட்டத்திலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரில், 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்
உள்ளன. இவற்றில் சில பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகளால், ஆண்டுதோறும்
பலர் இறக்கின்றனர். இது, காலம் காலமாக நடந்து வருகிறது.
இதைத் தடுக்க முடியாது; ஆனால், குறைக்க முடியும்.
எவருமே,
விபத்து ஏற்படுத்த வேண்டுமென, அஜாக்கிரதையாக வெடிபொருட்களை கையாளுவதில்லை;
சீதோஷ்ண நிலை காரணமாக, வெடிபொருட்களில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு,
விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன.
இப்படியான விபத்துகள் நடக்கின்றன
என்பதற்காக, அதிகாரிகளை வைத்து சிறிய பட்டாசு ஆலைகளுக்கு சோதனை என்ற
பெயரில், நெருக்கடியைக் கொடுத்து, சீல் வைத்து பூட்டப்படுகிறது.
தற்போதைய
நிலையில், பட்டாசு தொழில் தெரிந்தவர்கள், அதாவது வெடி மருந்தை கையாளத்
தெரிந்த ஏழை ஒப்பந்த தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை அடமானம் வைத்தோ,
வட்டிக்கு கடன் வாங்கியோ, பட்டாசு ஆலைகளில் சில அறைகளை குத்தகைக்கு
எடுத்து, தங்கள் குடும்பத்தினரையும், தங்கள் உறவினர்களையும் வைத்து,
பட்டாசு தயார் செய்து, வருமானம் ஈட்டுகின்றனர்.
அறை வாடகையும்
ஆண்டுக்கு 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை, முன்பணமாகக் கொடுக்க வேண்டி
இருக்கிறது. வேலை நடப்பதோ, ஐந்து அல்லது ஆறு மாதங்கள் தான்.
மழை
பெய்து விட்டால், பட்டாசு தயார் செய்ய இயலாது. விளம்பரம் இல்லாத டிரேட்
மார்க் கொண்ட பட்டாசுகள், என்ன தான்தரமாக இருந்தாலும், வியாபாரிகள், மிகக்
குறைவான விலைக்கு தான் வாங்குவர்.
இவ்வளவு சிரமங்களையும் சமாளித்து,
தங்கள் உயிரை பணயம் வைத்து வாழ்வாதாரம் பார்க்கும் இவர்களால், அரசு கூறும்
விதிமுறைகளைப் பின்பற்றுவது சிரமம் தான்.
இந்த பட்டாசு தொழிலில்
ஈடுபடுவோர், பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட இன மக்கள் தான். எனவே, 'இவர்கள்
தனியாக வியாபாரம் செய்து முன்னேறி விடக் கூடாது, மீண்டும் இவர்கள்
நம்மிடம் வேலைக்கு வரவேண்டும்' என்ற எண்ணத்தில், பெரிய பட்டாசு ஆலை
உரிமையாளர்கள், அதிகாரிகள் மூலமாக பல இடஞ்சல்களை கொடுத்து, சிறிய ஆலைகளை
சீல் வைத்து வருவதாகத் தெரிகிறது.
இந்த மக்களை கைதுாக்கி விடப் போவது யார்?
களங்கப்படுத்த வேண்டாமே!
சி.ஆர்.குப்புசாமி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: சமீபத்தில், இப்பகுதியில் மதுரை வாசகர் மல்லிகை மன்னன் எழுதிய,
'ஆண்டிகள் கூடி கட்டிய மடமாகும்' என்ற தலைப்பில் ஒரு கடிதம் வெளியாகி
உள்ளது.
பொதுவாக, ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது என்பது, வழக்கு மொழி தான்: பழமொழி அல்ல.
வழக்கு
மொழி சாதாரணமாக, கிராமப்புறங்களில் பாமர மக்களால் கையாளப்படுவது. அது,
எழுத்து வடிவில் கையாளப்படும் போது, பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
பொதுவாக
தொடக்க காலங்களில் ஆண்டி என்ற தமிழ்ச் சொல், மிக மிக மேன்மை
பொருந்தியதும், அதிபவித்திரமான ஓர் உயர் பிரிவு மக்களை சுட்டுவதாகவே
அமைந்திருந்தது. காலப்போக்கில் ஆண்டி என்ற இந்த சொல், வழக்கில் தாழ்ந்து
விட்டது.
நம் நாடு முழுதும், போற்றிப் புகழப்படுவதும், உலக
விஞ்ஞானிகளுக்கே இன்னமும் விளங்காத பெரும் புதிர்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளதுமான திருச்செந்துார் செந்திலாண்டவர் கோவிலை, நாம் அனைவரும்
அறிவோம்.
ஆனால், 1,000 ஆண்டு களாக, கடற்கரைக்கு மிக அருகில்
இன்னமும் நெடிதுயர்ந்து நிற்கும் இக்கோவிலை வடிவமைத்துக் கட்டி
முடித்தவர்கள், ஐந்து ஆண்டி பெருமக்கள்என்பதை, நம்மில் எத்தனை பேர்
அறிவோம்?
மேலும் இன்றைய சூழலில், ஆண்டி பண்டாரம் என்ற ஒரு
சமூகத்தினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், பல நிலைகளில், தமிழகத்தின்
ஓர் அங்கமாக வாழ்ந்து வரும் நிலையில், அந்த சமூகத்தின் பெயரை
களங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது.