/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம் ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்
ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்
ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்
ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்
ADDED : மே 14, 2025 12:18 AM

பாக்தாத் : மேற்காசிய நாடான ஈராக்கில், நஜாப் மாகாணத்தில் உள்ள அல்-பராக்கியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் அஹில் பக்ர் அல்-தின், 50. இவர், விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார்.
தன் வீட்டின் தோட்டத்தில், சிங்கங்கள் மற்றும் பிற காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், தான் வளர்த்து வந்த சிங்கம் ஒன்றுக்கு உணவு வைப்பதற்காக, சமீபத்தில் கூண்டின் அருகே சென்றார்.
அப்போது, அந்த சிங்கம் பாய்ந்து அல்-தினின் கழுத்து மற்றும் மார்பு பகுதியை கடித்துக் குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் அல்தினின் உடலை அந்த சிங்கம் விடாமல் கடித்துத் தின்றது.
இதைப் பார்த்து அலறிய குடும்பத்தினர், கூச்சலிட்டனர். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் அந்த சிங்கத்தை சுட்டுக்கொன்று, அல்தினின் உடலை மீட்டார்.
ஈராக்கில் குடியிருப்பு பகுதிகளில் விலங்குகளை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈராக் 2014ல் கையெழுத்திட்ட போதிலும், சட்டவிரோத விலங்கு கடத்தல் நாடு முழுதும் பரவலாகவே உள்ளது. இதனால், அரிய உயிரினங்கள் அழிவதும், விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாக இருப்பதாக, விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துஉள்ளனர்.
மேலும், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் பலர், தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை செல்லப்பிராணிகள் போல் வளர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.