/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'நீங்க இறந்துட்டீங்க... உங்களை விடுவிக்க முடியாது!' இலங்கை அகதியிடம் தமிழக அதிகாரிகளின் 'அறிவுபூர்வமான' பதில் 'நீங்க இறந்துட்டீங்க... உங்களை விடுவிக்க முடியாது!' இலங்கை அகதியிடம் தமிழக அதிகாரிகளின் 'அறிவுபூர்வமான' பதில்
'நீங்க இறந்துட்டீங்க... உங்களை விடுவிக்க முடியாது!' இலங்கை அகதியிடம் தமிழக அதிகாரிகளின் 'அறிவுபூர்வமான' பதில்
'நீங்க இறந்துட்டீங்க... உங்களை விடுவிக்க முடியாது!' இலங்கை அகதியிடம் தமிழக அதிகாரிகளின் 'அறிவுபூர்வமான' பதில்
'நீங்க இறந்துட்டீங்க... உங்களை விடுவிக்க முடியாது!' இலங்கை அகதியிடம் தமிழக அதிகாரிகளின் 'அறிவுபூர்வமான' பதில்
UPDATED : ஜூன் 13, 2024 02:54 PM
ADDED : ஜூன் 13, 2024 02:09 AM

சென்னை:'நீங்கள் இறந்து விட்டதால், உங்களின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது' எனக்கூறி, அரசின் சிறப்பு முகாமில் உயிருடன் உள்ள இலங்கை அகதியிடம், தமிழக அரசு அதிகாரிகள் கையெழுத்து பெற்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி, சிறை தண்டனை முடித்த வெளிநாட்டினர், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது, இலங்கைத் தமிழர்கள் உட்பட, 140க்கும் மேற்பட்டோர், இந்த முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இங்கு, இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 'கிருஷ்ணகுமார் உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்' எனக் கூறி, தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையத்துக்கு, அவரின் உறவினர் கடிதம் கொடுத்திருந்தார்.
ஆனால், கிருஷ்ணகுமார் இறந்துவிட்டதாக அரசிடம் இருந்து பதில் வந்துஉள்ளது.
இதை எதிர்த்து, கிருஷ்ணகுமாரின் உறவினரான நாகேஸ்வரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு:
மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில், என் இரு மகள்களுடன் வசித்து வருகிறேன்.
என் தங்கை மகன் கிருஷ்ண குமார், சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக, 2015ல், ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான குற்றங்களுக்கு, 2018ம் ஆண்டு, ராமநாதபுரம் நீதிமன்றம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். விசாரணையில், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
அவரின் சிறை தண்டனை முடிந்த பின், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். என் தங்கை மகனை, எங்கள் குடும்பத்தினருடன் நிரந்தரமாக தங்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதுகுறித்து, கடந்த மார்ச் 3ல், திருச்சி கலெக்டர், அயலக நலத்துறையின் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினேன். என் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். என் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்கு வாரங்கள் கடந்த பிறகும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17ல் என் தங்கை மகனுக்கு, தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையத்திடம் இருந்து, கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், 'மனுதாரர் கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதால், கோரிக்கையை பரிசீலிக்க இயலாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணகுமார் குறித்து, எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல், இப்படியொரு தவறான கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் தங்கை மகனை, எங்கள் குடும்பத்துடன் தங்க வைப்பது தொடர்பாக, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அபத்தமான செயல்
சிறை தண்டனை முடிந்து, சிறப்பு முகாமிற்கு வருபவர்களை, கோரிக்கை அடிப்படையில், உறவினர்களுடன் தங்க அரசு அனுமதிக்கிறது. அந்த வகையில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். திருச்சி முகாமில் உள்ள கிருஷ்ணகுமார், தன் சித்தியுடன் தங்க அரசிடம் உரிய அனுமதி கேட்டார். ஆனால், 'அவர் இறந்துவிட்டார்' என கடிதம் அனுப்பி, அவரிடமே கையெழுத்துப் பெற்றுள்ளனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நபருக்கு தினமும் அரசு, 175 ரூபாயை தருகிறது. இறந்து போனவருக்கு எப்படி அரசு பணம் கொடுத்து வந்தது? மொத்தத்தில் அலட்சியத்தோடு அதிகாரிகள் செயல்பட்டு, உயிரோடு இருப்பவரை இறந்து விட்டதாக, அபத்தமான செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு என்ன தண்டனை கொடுக்கப் போகிறது?
- பா.புகழேந்தி,
கிருஷ்ணகுமாரின் வழக்கறிஞர்.