Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: ஒவ்வொரு தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, கூட்டணியில் கூடுதல் 'சீட்' கேட்கிறோம். கூட்டணி பேச்சு முடிவின்படி, அவ்வப்போது எடுக்கப்படும் முடிவுகளை ஏற்கிறோம். தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக, அ.தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால், அக்கட்சியினருக்கு வருத்தம் உள்ளது. இதற்காக, அக்கட்சி தி.மு.க., கூட்டணிக்கு வரும் என சொல்ல முடியாது.

டவுட் தனபாலு: ஏற்கனவே 'ஹவுஸ்புல்'லாக உள்ள தி.மு.க., கூட்டணியில், ஷேர் ஆட்டோவில் பயணியரை ஏற்றுவதை போல, தே.மு.தி.க.,வை யும் ஏத்திக்கிட்டா, உங்களுக்கு தி.மு.க., வழக்கமா கொடுக்கிற ஒற்றை இலக்க தொகுதியை இன்னும் குறைச்சிடும் என்பதில் 'டவுட்'டே இல்லை!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கூட்டணி யில் மேலும் பல கட்சிகள் இணையும். 'தி.மு.க., கூட்டணி 200 இடங்களில் வெல்லும்' என, செல்லும் இடங்களில் எல்லாம் முதல்வர் பேசி வருகிறார். அது நடக்கவே நடக்காது. முதல்வர் பகல் கனவு காண்கிறார். வரும் 2026 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.

டவுட் தனபாலு: எட்டு கட்சிகள் உள்ள தி.மு.க., கூட்டணியில், இப்ப விஜயகாந்தின் தே.மு.தி.க.,வையும் சேர்த்துக்க தயாராகிட்டாங்க... அவ்வளவு வலுவான கூட்டணியை வைத்து உள்ள முதல்வர் ஸ்டாலின், '200 இடங்களில் தி.மு.க., கூட்டணி வெல்லும்'னு சொல்றதே பகல் கனவுனா, பா.ஜ.,வை தவிர, வேற எந்த கட்சியும் இன்னும் உங்களோடு கூட்டணிக்கு வராத நிலையில், 2026 தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும்னு நீங்க சொல்றது, உங்களின் பெருங்கனவு மட்டும் தான் என்பதில் 'டவுட்'டே இல்லை!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அரசியலுக்கு வயது கிடையாது. கருணாநிதி 95 வயது வரை அரசியலில் இருந்தார்; சக்கர நாற்காலியில் அமர்ந்து முதல்வராக செயல்பட்டார். உலக அளவில், மகாதீர் முகமது 92 வயதில், மலேஷியாவின் பிரதமராக இருந்தார். அதனால், அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வயது கிடையாது. வயது வெறும் எண் மட்டுமே!

டவுட் தனபாலு: உண்மை தான்... என்ன தான் மாணவ பருவத்தில் இருந்து தன் மகன் ஸ்டாலின் கட்சிக்கு உழைத்திருந்தாலும், தன் கடைசி காலம் வரை கட்சியின் தலைவராகவே இருந்தார் கருணாநிதி... ஆனால், நீங்க அவசரப்பட்டு உங்க மகன் அன்புமணிக்கு தலைவர் பதவியை துாக்கி கொடுத்துட்டு, உங்க குடும்பத்துல தான் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க என்பதில் 'டவுட்'டே இல்லை!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us