PUBLISHED ON : ஜூன் 09, 2025 12:00 AM

கம்யூ., கட்சியை சேர்ந்த, கேரள வேளாண் அமைச்சர் பிரசாத்: பாரத மாதா கையில் வைத்திருக்கும் கொடி, நம் தேசியக்கொடி அல்ல. அது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கொடி. கவர்னரும், அந்த அமைப்பும், தனிப்பட்ட நிகழ்ச்சியில் அதை பயன்படுத்தலாம். ஆனால், அரசு நிகழ்ச்சியில் அனுமதிக்க முடியாது. நாட்டின் ஜனாதிபதிகள், கேரளாவின் முந்தைய கவர்னர்கள் யாரும் பாரத மாதாவின் படத்தை அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தாத நிலையில், கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மட்டும் பயன்படுத்தியது ஏன்?
டவுட் தனபாலு: பாரதத்தில் உண்டு, உறங்கி, வீடு கட்டி, 'என் மண்' என சொந்தம் கொண்டாடுவோருக்கு, சீனாவில் வசிப்பது போன்ற நினைப்பு இருப்பது வியப்பை தான் ஏற்படுத்துகிறது. சீனாவில் இவங்க காலடி எடுத்து வைத்து தான் பார்க்கட்டுமே... அந்த தருணத்தில் தான், பாரதத்தின் பெருமை, இவங்களுக்கெல்லாம், 'டவுட்'டே இல்லாம புரியும்!
பணமோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, நம் நாட்டிலிருந்து தப்பிச்சென்று லண்டனில் வசிக்கும் சாராய வியாபாரி விஜய் மல்லையா: என் கடன் தொகையும், 11.5 சதவீத வட்டியும் சேர்த்து நான் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 6,203 கோடி ரூபாய். ஆனால், என் சொத்துகள் வாயிலாக, 14,000 ரூபாய் கோடியை, வங்கிகள் பறிமுதல் செய்துள்ளன. நான் திருடவும் இல்லை; ஓடியும் போகவில்லை. நான், இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. என்னை, 'மோசடிக்காரன்' என, எப்படி அழைக்க முடியும்?
டவுட் தனபாலு: 10 ஆண்டுகளுக்கு முன், பண மோசடி வழக்கில் சிக்கி, ஜாமினில் வெளி வர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், லண்டனுக்கு ஓடிட்டீங்க... இவ்வளவு காலமாய், எந்த கோர்ட்லயும் இந்த மாதிரியான வாக்குமூலத்தையும் நீங்க சொன்னதா தகவலே இல்லையே... முழு ஆதாரத்தோட நீங்க சிக்கி இருக்கிறதால, இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுவீங்கங்கிறதுல, 'டவுட்'டே இல்லே!
அகில இந்திய காங்., செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத்: பிரதமர் மோடியின் தோல்வி அடைந்த வெளியுறவு கொள்கையால், உலகம் முழுதும் இந்தியா அவமானப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், உலகத் தலைவர்களில் யார் யாரை சந்தித்தனர்; அந்த பயணத்தால், நம் நாட்டுக்கு என்ன பயன்?
டவுட் தனபாலு: பாகிஸ்தான் செய்யும் அட்டூழியங்களை நம்மை விட, வேறு எந்த நாடு ஆணித்தரமாக, வலுவாக சொல்லி விட முடியும்... காங்., மூத்த தலைவர் ராகுலுடன் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவரான உங்களை அழைத்துச் செல்லாமல், உங்கள் கட்சியை சேர்ந்த மற்றவர்களை அனுப்பியதால் ஏற்பட்ட கோபத்தால் இப்படி கொந்தளிக்கிறீங்களோன்னு, 'டவுட்' ஏற்படுகிறது!