PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா: கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு நினைவு மண்டபம் அமைக்க பூஜை போடப்பட்டுள்ளது. இருப்பினும், மண்டபம் கட்ட தி.மு.க., அரசு அனுமதி அளிக்கவில்லை. 2026ல், தமிழகத்தில் மீண்டும் ஜெ., ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் அனுமதி பெற்று மண்டபம் கட்டப்படும். தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே என் முதல் வேலை.
டவுட் தனபாலு: அது சரி... 'எனக்கு துரோகம் இழைத்தவங்க, 2026ல் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை... தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கிற தி.மு.க., அரசு மட்டும் மீண்டும் வரவே கூடாது'ன்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான அணிதான், கூட்டணி என்ற வடிவத்தோடு உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதாக சொல்லப்படும், பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், எந்த கூட்டணியில் இடம்பெற போகின்றன என்ற உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. 2026 தேர்தலில், எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணி முழு வடிவத்தில் இருப்பதால் மட்டுமே வெற்றி கிட்டி விடுமா என்ன...? தமிழகத்தின் புதிய வரவான நடிகர் விஜயின், த.வெ.க., எடுக்கும் முடிவுதான், தமிழகத்தில் எல்லா கூட்டணியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப் போகுது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: துணை முதல்வர் உதயநிதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதுகுறித்து, தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை விமர்சித்துள்ளார். பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். துணை முதல்வர் புகழின் உச்சியில் இருக்கிறார். முதல்வரின் வழிகாட்டுதலோடு, அவருக்கு தோள் கொடுத்து சுமக்கத் தயாராக இருக்கிறார் என்பதைத்தான், இதுபோன்ற விமர்சனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
டவுட் தனபாலு: முதல்வருக்கு துரைமுருகன், நேரு, வேலு, அவ்வளவு ஏன், உங்களை போன்ற சீனியர்கள் யாரும் தோள் கொடுக்க மாட்டீங்களா... அதுக்கும், முதல்வரின் மகனை தான் தேடணுமா... இதனால தான், தி.மு.க., மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக தொடருது என்பதில், 'டவுட்'டே இல்லை!