PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: தேவேந்திரகுல மக்களுக்கு வரும் பாதிப்புகளை தடுக்க வலியுறுத்தி, திருச்சியில் பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம்; மறுத்து விட்டனர். ஆனால், மற்றொரு அமைப்புக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பேரணி நடத்த அனுமதி கொடுப்பதில், தமிழக போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றனர். இது கண்டனத்துக்குரியது.
டவுட் தனபாலு: பேரணி, பொதுக்கூட்டத்துக்கு உடனே அனுமதி வாங்கணும் என்றால், நீங்க ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்திருக்கணும்... அப்படி இருந்தால், பேரணியை நடத்திய பிறகுகூட, போலீசாரிடம் போய் முன்தேதியிட்டு அனுமதி வாங்கிக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை தன் அதிரடி பேச்சு மற்றும் நடவடிக்கையால், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ., உருவெடுத்தது. நயினார் நாகேந்திரன் மாநில தலைவரான பின், தமிழக பா.ஜ., உறக்க நிலைக்கு சென்று விட்டது; இதனால், தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக அண்ணாமலை இருந்தாரு... அ.தி.மு.க., கூட்டணிக்காக அவரது பதவியை பறித்து, அதே கட்சியின், 'மாஜி' அமைச்சரான நயினார் நாகேந்திரனிடம் பொறுப்பை கொடுத்தா என்னாகும்...? இப்ப, தி.மு.க.,வின் ஒரு அணியாக காங்., கட்சி இருப்பது மாதிரி, அ.தி.மு.க.,வின் கிளை கழகமாகவே, தமிழக பா.ஜ.,வும் மாறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ்: கிறிஸ்துவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட பின்னரும், அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை; அவர்களிடம் கெஞ்சியும், கையேந்தியும் நிற்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். ஆட்சியில் பங்கு கேட்கவில்லை; அதிகாரப் பகிர்வு கேட்கவில்லை. குறைந்தபட்ச மரியாதையையும், மாண்பையும் எதிர்பார்க்கிறோம். அதுவும் கிடைக்கவில்லை; சுயமரியாதையை இழந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில், அவங்க சின்னத்தில் நின்னு ஜெயித்தும், அதிகாரிகள் உங்களை மதிக்கலையா... தேர்தல் வரும்போது உங்க ஆதங்கத்தை கொட்டுவதை பார்த்தால், தி.மு.க., கூட்டணிக்கு டாட்டா காட்ட தயாராகிட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே!