PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: டில்லி, சத்தீஸ்கர் மதுபான ஊழலை தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது மதுபான ஊழல் நடந்துள்ளது. அமலாக்க துறை சோதனையில், 30,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான ஊழல் மூலம், தி.மு.க.,வுக்கு மட்டும் 1,000 கோடி ரூபாய் கருப்பு பணமாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தின் மூலம், 2024 லோக்சபா தேர்தலை சந்தித்து உள்ளனர். அடுத்து, 2026 சட்ட சபை தேர்தலையும் சந்திக்க, நிறைய பணம் பதுக்கி உள்ளனர்.
டவுட் தனபாலு: கிராமங்கள்ல, 'எரியுறதை பிடுங்கிட்டா, கொதிக்கிறது அடங்கிடும்'னு சொல்லுவாங்க... அந்த வகையில, 2024 தேர்தல் வெற்றிக்கு தி.மு.க.,வுக்கு உதவிய மதுபான ஊழல் பணம், 2026 தேர்தல் வெற்றிக்கும் உதவிட கூடாதுன்னு உஷாராகியே, அமலாக்க துறையை அனுப்பி சோதிக்கிறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா, குறுவை சாகுபடியில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், 1.80 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவை, தற்போது பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தன. இதற்கு கொள்முதல் நிலையங்களில் போதிய இடம், தார்ப்பாய்கள் இல்லாததே காரணம்.
டவுட் தனபாலு: மார்ச் மாசத்துல மழை பெய்யும்னு அதிகாரிகள் கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாங்க... ஆயினும், வரும்முன் காக்க தவறிய அதிகாரிகளிடமே இதற்கான இழப்பீட்டை வசூலிக்கணும்... அதுதான், எதிர்காலத்தில் அவங்களுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி: 'கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, முதல்வர் சித்தராமையா சொல்கிறார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்துக்கு, சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்க பெங்களூரு சென்ற நம் அமைச்சர் பொன்முடி, 'மேகதாதுவில் அணை கட்டக்கூடாது; அப்படி கட்டினால், எங்கள் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவர்' என்பதை வலியுறுத்தி சித்தராமையாவிடம் பேசியிருக்க வேண்டாமா?
டவுட் தனபாலு: திருமண விழாவுக்கு உறவினருக்கு பத்திரிகை வைக்க போற இடத்துல, அவர் தர வேண்டிய கடனை கேட்க முடியுமா...? உங்க வாதப்படியே பொன்முடி கேட்டு, அதுக்கு சித்தராமையா தலையை ஆட்டியிருந்தாலும், அம்மாநிலத்துல இருக்கிற உங்க கட்சியினர் ருத்ரதாண்டவமே ஆடியிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!