PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: தமிழக பா.ஜ.,வினர், மும்மொழிக்கு ஆதரவாக மாணவ - மாணவியரிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெறுகின்றனர். தமிழகத்தில், பா.ஜ., என்றைக்கும் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி தான். மற்ற கட்சிகளோடு சேர்ந்து, பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்திருப்பரே தவிர, அக்கட்சிக்காக இல்லை. அக்கட்சிக்கு தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது.
டவுட் தனபாலு: பா.ஜ.,வை விடுங்க... தி.மு.க.,வுக்கு தான் தனிப்பட்ட செல்வாக்கு இருக்குதே... அப்புறம் ஏன் தேர்தல்கள்ல, தனித்து போட்டியிடாம, கூட்டணி கட்சிகளை துணைக்கு அழைக்குறீங்க... 'கூட்டணி கட்சிகளின் தயவுல தான், நீங்க ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கீங்க' என்று யாராவது சொன்னால், 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா?
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி: 'பி.எம்., போஷன்' திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்க, மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு, 2014 - 15 முதல் நடப்பாண்டு வரை, 4,727 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு, உணவு வழங்கும் திட்டத்திற்கும், அத்திட்டத்தில் பணிபுரியும் சமையலர், உதவியாளர் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கவும், மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
டவுட் தனபாலு: நீங்க 10 வருஷமா தந்த 4,727 கோடியை விட, இந்த வருஷம் தராத 2,000 கோடி ரூபாய் தானே, தி.மு.க., அரசுக்கு பெருசா தெரியுது... அதனால, நீங்களும் போனா போகுதுன்னு, 2,000 கோடியை குடுத்துட்டு, மும்மொழி கொள்கையின் பயன்கள் பற்றி பிரசாரம் செய்தால், தமிழக மக்களிடம் நன்றாகவே எடுபடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மஹாராஷ்டிராவை சேர்ந்த, சிவசேனா உத்தவ் அணி கட்சியின் எம்.எல்.ஏ., ஆதித்யா தாக்கரே: தேர்தல் சமயத்தில் தந்த வாக்குறுதியான மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்குவது பற்றி, மஹாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடரில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வாய் திறக்கவில்லை. விவசாய கடன் ரத்து அறிவிப்பும் இல்லை. இந்த அரசு வெட்கக்கேடான வகையில் நடந்து கொள்கிறது.
டவுட் தனபாலு: ஐந்தாண்டு கால ஆட்சியில், நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்க... ஆட்சியில் அமர்ந்ததுமே எல்லா வற்றையும் நிறைவேற்றணும்னு நீங்க எதிர்பார்ப்பதில் பக்கா அரசியல் தான் இருக்குது; மக்கள் நலன், மருந்துக்கு கூட இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!