PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்: உணவு துறையும், கூட்டுறவு துறையும் இணைந்து செயல்பட்டால் தான் ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் கிடைக்கும். ஆனால், உணவு துறை அமைச்சர் சக்கரபாணியும், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியும் நவகிரகம் போல ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டர். இவர்கள் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து பேச பொம்மை முதல்வருக்கு திராணி இல்லை.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற ரெண்டு அமைச்சர்களும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவங்க... அந்த மாவட்டத்துல யார் பெரியவர்னு ரெண்டு பேருக்கும், 'ஈகோ' மோதல் இருக்கு... அதையே அரசு நிர்வாகத்துலயும் காட்டுறதால தான், ரேஷன் கடைகள்ல பருப்புக்கும், பாமாயிலுக்கும் மக்கள் அல்லாடிட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன்: தமிழகம் முழுதும், மின் கட்டண உயர்வால், குறு, சிறு தொழில்கள் காலியாகி வருகின்றன. மாநிலத்தில் தொழில்களை காப்பாற்ற முடியாத முதல்வர் ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டை ஈர்ப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. மின்கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
டவுட் தனபாலு: 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்'னு கிராமங்கள்ல ஒரு பழமொழி உண்டு... அந்த வகையில, உள்ளூர் தொழில்களை இருட்டுல தள்ளிட்டு, வெளிநாட்டு தொழிலதிபர்களை தேடி முதல்வர் பயணம் போறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் முனுசாமி: மத்திய பட்ஜெட்டில் பீஹார், ஆந்திராவுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதமர் மோடி, தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக இருந்தாலும், தான் ஒரு சாதாரண அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.
டவுட் தனபாலு: நீங்க சொல்றதும் சரிதான்... ஆனா, உங்க தலைவர் பழனிசாமி முதல்வரா இருந்தப்ப, அவரது சொந்த ஊரான சேலத்துக்கு எத்தனை மேம்பாலங்கள், எவ்வளவு குடிநீர் திட்டங்களை கொண்டு போனாரு... அப்ப எல்லாம், அவர் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் முதல்வர்னு சிந்திக்காதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!