PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

கர்நாடகாவை சேர்ந்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி: கடந்த ஐந்தாறு நாட்களாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 5 - 6 டி.எம்.சி., தண்ணீர் சென்றுள்ளது. ஜூன், ஜூலையில் அளிக்க வேண்டிய நீரை விட அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், நான் கூறுவது ஒன்று தான். வீணாகும் உபரிநீரை நல்ல முறையில் பயன்படுத்தும் நோக்கில் மேகதாது திட்டத்துக்கு தமிழகம் சம்மதிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: ஏற்கனவே, உங்க ஊர் அணைகள் நிரம்பியதும், உபரி நீரை திறக்கும் வடிகாலா மட்டுமே தமிழகத்தை வச்சிருக்கீங்க... இதுல, மேகதாது அணையையும் கட்டுனீங்க என்றால், கேட்கவே வேண்டாம்... எங்க விரலை வச்சு, எங்க கண்ணையே குத்த பார்ப்பது நியாயமா என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: மேற்கு வங்கத்தில் ஊடுருவலை நியாயப்படுத்துவதற்காக, வங்கதேசத்தில் இருந்து வருவோருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியை பொறுத்துக் கொள்ள முடியாது.
டவுட் தனபாலு: அது சரி... மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசின் பெரிய ஓட்டு வங்கியே, இந்த மாதிரி அண்டை நாடுகள்ல இருந்து ஊடுருவி வந்தவங்க தானே... தன் ஓட்டு வங்கி பேலன்சை அதிகரிக்கவே, அவர் இப்படி அழைப்பு விடுக்கிறார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக, ராமனை பார்க்கிறோம். சமத்துவமும், சமூக நீதியும் எல்லாருக்கும் சமம் என்று போதித்தவன் ராமன். ராமன் அனைவருக்கும் பொதுவானவராகத்தான் பார்க்கப்படுகிறார். அதே போல் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ, சகோதரத்துவ சமூக நீதி ஆட்சியை நடத்தி வருகிறார்.
டவுட் தனபாலு: அடடா... உங்க ராமர் பக்தியை பார்க்கிறப்போ புல்லரிக்குது போங்க... விட்டா, 'ராமர் தான் கலியுகத்துல, ஸ்டாலினா அவதாரம் எடுத்து ஆட்சி நடத்திட்டு இருக்கார்'னு சொன்னாலும் சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!