PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

தி.மு.க., தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன்: 'நீட்' தேர்வு தேவையில்லை என்பது தான் எங்கள் கருத்து. 'நீட்' தேர்வு விலக்கு குறித்த தீர்மானத்தை நடிகர் விஜய் ஆதரித்துள்ளார். இது, தி.மு.க., மாணவர் அணி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீட் தேர்வு விவகாரத்தில், விஜய் நல்ல முடிவு எடுத்துள்ளார்.
டவுட் தனபாலு: தமிழகத்துல, பா.ஜ., தவிர, மற்ற எல்லா கட்சிகளுமே நீட் தேர்வுக்கு எதிராகவே இருக்கின்றன... ஏற்கனவே மத்திய பா.ஜ., அரசின் ஜி.எஸ்.டி.,யை எதிர்த்து பேசிய ஜோசப் விஜய்யிடம் இருந்து, நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்தை எதிர்பார்க்க முடியுமா...? இதே விஜய், ஒரு வாரத்துக்கு முன்னாடி, 'தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமா இருக்குது'ன்னு சொன்ன கருத்தை யும், 'டவுட்'டே இல்லாம ஏத்துக்குவீங்களா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலில் போட்டியிடாத கட்சியினர், சமூக வலைதளங்களில், பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், 'ஏ டீம்' தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான், 'பி டீம்' அ.தி.மு.க., ஒதுங்கி இருப்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
டவுட் தனபாலு: எதிர்காலத்துல, தமிழகத்தில் பா.ஜ., பிரமாண்டமா வளர்ந்துட்டா, உங்களை எதிர்க்க தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கைகோர்க்க வேண்டிய சூழல் கூட வரலாம்... அதுக்கு, இப்பவே ஒத்திகை பார்த்துக்கிறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.,வின் வலியுறுத்தலும் நிலைப்பாடும். தற்போது நடிகர் விஜயும் எங்கள் நிலைப்பாட்டிலேயே இருந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார். அவருடைய கருத்தை வரவேற்கிறோம்.
டவுட் தனபாலு: இப்ப, உங்க கட்சி இருக்கிற சூழல்ல, சீமான், நடிகர் விஜய்னு எந்த கொழு கொம்பு கிடைச்சாலும், பிடிச்சு கரையேறிதான் ஆகணும் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!