PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கடந்த முறை, 38 எம்.பி.,க்களை வைத்துக் கொண்டு, 'நீட்' ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத, தி.மு.க., தற்போது, 40 எம்.பி.,க்கள் இருந்தும், பார்லிமென்டில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டு வராமல், சட்டசபையில் மூன்றாவது முறையாக தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்... இத்தீர்மானம், தி.மு.க., அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம்.
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 'கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு போன்ற பிரச்னை கள்ல என்ன நடவடிக்கை எடுத்தீங்க' என கேட்டால், 'சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்'னு தேதி வாரியா பட்டியல் தருவாரு... தந்தை வழியில் தனயன் ஸ்டாலினும் பயணிக்கிறார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: ரேஷன் கடைகளில், ஜூனில் பருப்பு, பாமாயில் பெறாதவர்களின் வசதிக்காக, ஜூலையில் பெற தேவையான, அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஜூனில் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், அவற்றை ஜூலை துவக்கத்தில் இருந்து, மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்.
டவுட் தனபாலு: மார்க்கெட்டுல, 135 ரூபாய் மதிப்புள்ள பருப்பை, 165 ரூபாய்க்கு கொள்முதல் பண்ண போறதாகவும், அதுல, துறையின் முக்கிய புள்ளிகள் லாபம் பார்க்க துடிப்பதாகவும் செய்திகள் வெளியானதே... மக்களுக்கு துவரம் பருப்பு தருவதற்கு பதிலா, வெளி மார்க்கெட்டில் பருப்பின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால், தமிழக அரசை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
பா.ஜ., - எம்.பி.,யான பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்: பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங்கெடுக்க வந்த என்னைப் போன்ற, முதல் முறை, எம்.பி.,க்களுக்கு எதிர்க்கட்சிகளின் அமளி, திகைப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
டவுட் தனபாலு: அடடா... பார்லிமென்டுல ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் தரும்... சுவையான, மக்களுக்கு பயனுள்ள விவாதங்கள் எல்லாம் நடக்கும்னு நம்பி ஏமாந்துட்டீங்களா... அடுத்த, அஞ்சு வருஷமும் அவங்க அக்கப்போர் இப்படி தான் இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை... போக போக போரடிச்சு போய், நீங்களே திரும்பவும் சினிமாவுல நடிக்க போனாலும் போயிடுவீங்க!