PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
சூரியனுக்கு அருகில் பூமி
சூரிய குடும்பத்தில், அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது பூமி, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. பூமி ஒருமுறை சூரியனை சுற்ற 365 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது ஆண்டுதோறும் ஜனவரியில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்), ஜூலையில் சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), பூமி கடந்து செல்கிறது. இந்தாண்டு (2024 ஜன. 3ல் ) பூமி, சூரியனுக்கு அருகில் (14.7 கோடி கி.மீ., துாரம்) கடந்து சென்றது. அடுத்து தொலைவாக, ஜூலையில் 15.2 கோடி கி.மீ., துாரத்திலும் இருக்கும்.
தகவல் சுரங்கம்
பெரிய எரிமலை
உலகின் பெரிய எரியும் எரிமலை 'மவுனா லாவ்'. இது 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவில் உள்ளது. கடைசியாக 2022 நவ. 27ல் வெடித்து 'லாவா'வை வெளியிட்டது. டிச.13ல் 'லாவா' வெளியேறுவது நின்றது. இதற்குமுன் 1984ல் வெடித்தது. இந்த இரண்டு வெடிப்பு நிகழ்வுகளில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் 1950, 1926களில் இந்த எரிமலை வெடித்ததில் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதன் பரப்பளவு 5271 சதுர கி.மீ., கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் இந்த எரிமலையின் உச்சி அமைந்துள்ளது.